Pages

Monday 23 August 2010

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பரிணாமம் - கல்முனையூரான்பதீ

தூது வரும் தேர்தல்; தீர்வைத் தேடும் பார்வை - III -


இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பரிணாமம்

'பொதுப்பணி செய்வதற்குரிய ஏதேனுமொரு பதவிக்கு அல்லது நிறுவனத்துக்கு வேட்பாளர்களாக நிற்கும் பலருள் ஒருவரை அப்பதவிக்கு அல்லது நிறுவன உறுப்பினர் பதவிக்குத் தகுதியுடையவரென்று வாக்காளர்களால் இரகசிய முறையில் தெரிவு செய்தல்' தேர்தல் எனப்படும்.

அரசியலில் 'தேர்தல்' என்ற பதம் நாட்டின் தலைவரை, நாட்டின் அதியுயர் சபையான பாராளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை அனுப்புவதற்காக நடாத்தப்படுகின்ற தெரிவு 'தேர்தல்' எனப் பொருள் கொள்ளப்படுகின்றது.

அந்த வகையில் இக்கட்டுரையின் இத்தொடர் நாட்டின் அதியுயர் சபையாகக் கொள்ளப்படுகின்ற சட்ட சபை – பாராளுமன்ற - தேர்தல்கள் பற்றி அலசுகிறது.

இலங்கையின் அதியுயர் சபையான பாராளுமன்றத்தின் பிரதான பணி நாட்டுக்குத் தேவையான சட்டங்களை வகுப்பதாகும். இந்த அடிப்படையில் இலங்கையில் சட்டங்களை வகுத்தளிக்கும் மன்றம் ஆரம்பத்தில் சட்டசபை (Legislative Council) எனவும், பின்னர் அரசுப் பேரவை (State Council) என்றும், பிரதிநிதிகள் சபை, பாராளுமன்றம் என்றெல்லாம் நாமமிட்டு அழைக்கப்பட்டு வந்துள்ளது.

சட்டசபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

இலங்கை பிரத்தானியாவின் குடியேற்ற நாடாக விளங்கிய காலத்தில் 1833-ம் ஆண்டில் சட்ட சபை (Legislative Council) ஸ்தாபிக்கப்பட்டது. இச்சபையில் அப்போது இந்நாட்டில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக ஸர் பொன்னம்பலம் இராமநாதன் நியமிக்கப்பட்டார்.

1833-ம் ஆண்டிலிருந்து சுமார் 56 ஆண்டுகள் முஸ்லிம் பிரதிநிதி எவரும் சட்டசபையில் அங்கம் பெற்றிருக்கவில்லை.

1889-ம் ஆண்டு ஒக்டோபர் 29-ம் திகதி முதன் முதலாக கௌரவ எம்.ஸீ. அப்துல் ரஹ்மான் அவர்கள் சட்ட சபைக்கு நியமிக்கப்பட்டார்கள். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் சட்ட சபைக்கான முலாவது முஸ்லிம் பிரதிநிதித்துவ நியமனம் இதுவேயாகும்.

அப்துல் ரஹ்மான் அவர்களின் தந்தை முஹம்மத் காஸிம் போய் இந்தியாவின் சூரத் எனுமிடத்திலிருந்து வந்த ஒரு வர்த்தகராவார். அப்துல் ரஹ்மான் அவர்களும் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒரு பெரு வர்த்தகராவும், சரக்குக் கப்பல்;கள் பலவற்றின் சொந்தக்காரராகவும் விளங்கினார்.

கௌரவ அப்துல் ரஹ்மான் அவர்களே கொழும்பு மாநகர சபைக்கு நியமிக்கப்பட்ட முலாவது (1876 – 1879) முஸ்லிம் அங்கத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலிருந்து காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.எம். ஷரீப் (ஷரீப் புறக்டர்) சட்டவாக்க சபைக்கு நியமிக்கப்பட்டார். 1900-ம் ஆண்டு ஷரீப் புறக்டர் பதவியிலிருந்து விலகவே டபிள்யூ.எம். அப்துல் ரஹ்மான் அவ்விடத்துக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் 1917-ம் ஆண்டில் என்.எச்.எம். அப்துல் காதர் அவர்கள் சட்டவாக்க சபைக்கு நியமிக்கப்பட்டு 1923ம் ஆண்டு வரை பதவியிலிருந்தார். இது காலம் வரை சட்டசபைக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் நியமன அங்கத்தவர்களாகப் பிரிதிநிதித்துவம் செய்தார்களேயன்றிஇ முஸ்லிம்களால் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்படவில்லை.

முஸ்லிம்களின் வாக்குரிமை

1924-ம் ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் முஸ்லிம்கள் தேர்தலில் வாக்களிப்பின் மூலம் 03 பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான உரிமை அரசாங்கத்தினால் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டது.

முஸ்லிம்களில் அவர்களின் வருமானம்இ பொதுவான படிப்பறிவு தகைமைகளைத் தகுதியாகக் கொண்ட ஆண்கள் மாத்திரம் வாக்களிப்பதற்கான உரிமை பெற்றார்கள்.

1924-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 04 முஸ்லிம்கள் போட்டியிட்டு, அவர்களில் மூவர் வெற்றிபெற்றனர். எச்.எம். மாக்கான் மாக்கார், டாக்டர் ரீ.பி. ஜாயா, என்.எச்.எம். அப்துல் காதர் ஆகியோரே வெற்றி பெற்றோராவர்.

1931-ம் ஆண்டு சட்ட சபை, அரசுப் பேரவை எனப் பெயர் மாற்றமடைந்து முதலாவது அரசுப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட ஸர் முஹம்மத் மாக்கான் மாக்கார் மாத்திரமே வெற்றி பெற்றார். காலித் சுல்தான் அவர்கள் நியமன உறுப்பினராக அரசுப் பேரவைக்கு நியமிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாணத்தில் தேர்தலின் மூலம் முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸர் மாக்கான் மாக்கார் முதலாவது அரசுப் பேரவையில் தொடர்பாடல் மற்றும் மராமத்து அமைச்சராகவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக ஆரம்பித்த முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவமானது காலத்துக்குக் காலம் வளர்ச்சி கண்டு வந்தது.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் - பாராளுமன்றப் - பிரதிநிதித்துவம் பற்றி நாம் ஆய்வு செய்யும்போது, இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகைப் பரம்பல் தொடர்பாகவும் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

முஸ்லிம்களின் அரசியல் பலம்

2001-ம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் பிரகாரம், இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம் சனத்தொகையானது 454,580 எனவும், வடமாகாணம் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலும் சுமார் 1,106,345 எனவும் அண்ணளவாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சனத்தொகைப் பரம்பலின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் செறிவான வாக்காளர் பரம்பல் காணப்படுவதனால், முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதியாகத் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகின்றமை புலனாகின்றது.

இலங்கை முஸ்லிம்களின் மொத்த சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் வாழ்கின்றபோதிலும், அவர்கள் நாட்டின் 08 மாகாணங்களிலும் 19 தேர்தல் மாவட்டங்களில் பரந்து வாழ்கின்றமையால் ஒரு நிலையான, செறிந்த வாக்கு வங்கியைத் தொடர்ச்சியாகப் பேண முடியாதுள்ளமை கண்கூடு.

உதாரணத்திற்கு, மேல் மாகாணத்தில் மாத்திரம் 378,173 முஸ்லிம்கள் வாழ்கின்றபோதிலும், தேசியக் கட்சிகளுடனும், ஜே.வி.பி.யுடனும் இணைந்து தேர்தல் மூலம் 04 பாராளுமன்றப் பிரதிநிதிகளை மாத்திரமே பெறமுடிந்துள்ளது.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்படுகின்ற - தேசிய நலநன நோக்காகக் கொண்ட - சகவாழ்வுடனான - தனித்துவ அரசியல் வழிமுறைகளினூடாகக் கட்டியெழுப்பப்படும் ஒற்றுமைப் பலத்தின் மூலம் இந்நாட்டில் வாழும் முழு முஸ்லிம்களினதும் விவகாரங்களுக்குத் தீர்வு காணக்கூடிய – முஸ்லிம்களின் அரசியல் பொருளாதார, சமூக, சமய மறுமலர்ச்சிக்கு வித்திடக் கூடிய – அரசியல் பலம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது மறுப்புக்கிடமின்றி ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்மானமாகும்.

எனவே, கிழக்குமாகாண அரசியல் களம் மீது, நாம் நுட்பமாக எமது பார்வையைச் செலுத்துவது பொருத்தமாகும் எனக் கருதுகின்றோம்.

கிழக்கின் முஸ்லிம் அரசியல் யுகம்

கிழக்கு மாகாண அரசியலை நாம் நான்கு காலகட்டங்களாக விரித்து ஆராயலாம்.

1. 1931 இலிருந்து 1988 வரையிலான காலம்

2. 1989 இலிருந்து 2000 வரையிலான காலம்

3. 2001 இலிருந்து 2010 வரையிலான காலம்

4. 2010 இற்குப் பின்னர்..

கிழக்கு மாகாண அரசியலில் தென்றலும் புயலும் - பனியும், பெருமழையும் - குளிர் நிலவும், இடி மின்னலும் - கலந்த விறுவிறுப்பான கதை அடுத்து வருகிறது...கல்முனையூரான்பதீ  (Muslimguardian)
Home

No comments:

Post a Comment