Pages

Saturday 20 January 2018

'உள்ளுராட்சி சபை' சிந்தனையும் , பிரஜைகளின் அரசியலும்

(நேற்று விடிவெள்ளி வார இதழில் வெளிவந்த கட்டுரையின் முழுமையான வடிவம்)

சமீபத்தில் திருமண வைபமொன்றின் போது என்னுடன் உரையாடிக் கொண்டிருந்த ஒருவர் சடுதியாக குறித்த கட்சியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டார வேட்பாளரொருவருடைய துண்டுப் பிரசுமொன்றைக் சுட்டிக் காட்டினார். அதில் ' 'வேட்பாளரைப் பார்க்காதீர் ! இனவாதத்திலிருந்து நாட்டை மீட்கப் போகும் கட்சிக்கு வாக்களியுங்கள்' என்று தலைப்பிடப்பட்டு பல விடயங்கள் எழுதப்பட்டிருந்தன. பின்பு அவர் என்னிடம் 'இவனுகளை விடக் கூடாது. உள்ளூரட்சி சபைத் தேர்தல் என்பது ஊர் மக்களுடைய அபிவிருக்தி சார்ந்த விடயங்களை முன்னிறுத்திப் பேச வேண்டிய தேர்தலப்பா இது. வட்டார முறை இவனுகளுக்கு நல்ல ஆப்பு. சேவை செய்கிறானா ! இல்லையா! என்று இனித்தான் தெரியவரும். இந்த துண்டுப் பிரசுரத்தை பாருங்க ! கட்சிகளுடைய தேசிய இமேஜைக் காட்டி வாக்குக் கேக்குறானுவல் பயல்கள். இங்க வாங்கோ ஜக்கிய தேசியக் கட்சி நாட்டுல என்ன செய்யுது ? சுதந்திரக் கட்சி நாட்டுல என்ன செய்யுது? என்ற மெடரெல்லாம் எங்களுக்கு தெரியும். எங்கட வட்டாரத்துக்கு நீங்க என்ன செய்ய போறீங்க? என்டு முஞ்சில பட கேட்கனுமப்பா இவனுல்ட' என்றார்.
இது ஏதேச்சiயாகவும் , கிராமத்து மொழியிலும் முன்வைக்கப்பட்ட கருத்தாக இருந்தாலும் கூட, உள்ளுராட்சி சபைகள் என்ற அதிகாரக் கட்டமைப்பின் தத்துவம் மற்றும் அதன் இலக்குகள் என்ன? மற்றும் இலங்கையின் பாரம்பரிய அரசியல் கலாசாரம் அதனை எவ்வாறு பலவீனப்படுத்தியுள்ளது? அரசியல் கட்சிகள் தேர்தல்கள் தத்துவத்தை சிதைப்பதற்காக பின்பற்றும் வியூகங்கள் யாவை ? போன்ற கேள்விகளை மையப்படுத்திய விவாதங்களை மக்கள் மன்றத்தில் ஆரம்பித்து வைப்பதற்கான ஆரம்ப உள்ளீடுகளை அவரது வசனங்கள் கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன். அந்தப் பின்புலத்திலேயே உள்ளுராட்சி சபை ஒழுங்கு என்றால் என்ன ? அதன் அரசியல் முக்கியத்துவம் என்ன? இலங்கையின் உள்ளுராட்சி சபை கட்டமைப்பு மேற்குறிப்பிட்ட இலக்குகளிருந்து எந்தளவு தூரத்தில் பயணிக்கின்றது? போன்ற கேள்விகளுக்கு விடை காணும் வகையில் இக்கட்டுரை நகர்ந்து செல்கிறது.

உள்ளுராட்சி சபை சிந்தனையும் , கோட்பாடும் :

அரசியல் கோட்பாட்டாளர்கள் 'உள்ளுராட்சி சபை' சிந்தனையை , அதன் பின்புல ஆழ அகலங்களை அடையாளப்படுத்தும் வகையில் பல்வேறு பிரயோகங்களைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக 'Government Beyond the center' (மத்திய அரசைத் தாண்டிய அரசாங்கம்) என்பது அத்தகையதொரு பதப்பிரயோகம் எனலாம். மத்திய அரசை விடவும் மக்கள் நலன்களை உடனடியாக அறிந்து , நிறைவேற்றும் அதிகார அலகு என்று அதனது வரைவிளக்கணம் சொல்கிறது. மேலும், 'Door Step Government' (வீட்டு வாசப் படி அரசாங்கம்) என்ற மற்றொரு சொல்லாடலும் உள்ளுராட்சி சபைகள் சிந்தனையை சுட்டி நிற்கிறது. மத்திய அரசாங்கத்தை விடவும் 'பிரஜைகளுக்கு' நெருக்கமான அரசாங்கமாக 'உள்ளுராட்சி அரசாங்கத்தை' கருத வேண்டும் என்ற கருத்தையே 'வீட்டு வாசப்படி அரசாங்கம்' பதம் நாடுகிறது. அதாவது, ஒரு நாட்டினுடைய அரசியல் வலைபின்னலில் ஒரு பிரஜைக்கு நெருக்கமான முதலாவது 'அதிகாரக் கட்டமைப்பு' உள்ளுராட்சி அரசாங்கமாகும். வேறு சில அரசியல் ஆய்வாளர்கள் 'Self-Government' (சுய-அரசாங்கம்) என்ற பிரயோகத்தால் உள்ளுராட்சி அரசாங்கங்களை வர்ணிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியிலுள்ள மக்கள் தமது தேவைகளை , அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன் , தமது பிரதேசத்திற்கேயுரிய கலாச்சாரம் , இன மற்றும் சனப் பரம்பலைக் கருத்திற் கொண்ட நிலையில் தம்மை நிர்வகித்துக் கொள்வதற்கான ஒழுங்கு என்ற அடிப்படையில் 'சுய-அரசாங்கம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதனோடிணைந்த வகையில், பிரன்சு அரசியல் விஞ்ஞானி அலக்ஸ் டீ டேர்கியோவெலி 'School of Political Education' (அரசியல் கல்விக்கான பாடசாலை) என உள்ளுராட்சி சபை சிந்தனையை வரையறை செய்கிறார். ஏனெனில், விரும்பியோ , விரும்பாமலோ மக்களுக்கு மிக நெருக்கமாக தொழிற்பட வேண்டிய நிர்ப்பந்த நிலை உள்ளுராட்சிக் கட்டமைப்பில் உள்வாங்கப்படும் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றன. எனவே, மக்கள் தமது பிரதிநிதிகளது செயற்பாடுகளை மதிப்பீடு செய்தல் , தத்தமது கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துத் தருமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தல் , பொருத்தமானவர்களை அபேட்சகராக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளல் மற்றும் கிராமிய விவாகரங்களை முன்னிறுத்தி நேரடியாக அரசியல் விவாதங்களில் ஈடுபடுதல் போன்ற அரசியல் நடத்தைகளை சமூகத்தின் அடிமட்டம் வரை கொண்டு சென்று , அதன் மீது அவர்களை பயிற்றுவிப்பதற்கு 'உள்ளுராட்சி அரசாங்கங்கள்' துணை செய்வதாக அவர் வாதிக்கிறார். அந்த வகையிலேயே அரசியல் விழிப்புணர்வை சமூக மயப்படுத்தும் செயற்திட்டத்தின் 'ஆரம்ப நிலைப் பாடசாலை'யாக உள்ளுராட்சி சபைகளை நோக்க வேண்டும் என அவர் கருகிறார்.
இன்னும் சில அரசியல் சிந்தனையாளர்கள் 'Local Democracy' (உள்ளக ஜனநாயகம்) என உள்ளுராட்சி அரசாங்கங்களை அழைக்கிறார்கள். இக்குறித்த பிரயோகத்தை தெரிவு செய்ததன் பின்புலத்தில் அவர்கள் விவாதிக்கும் நியாயப்பாடுகள் அவதானிக்கத்தக்கவை. பொதுவாகவே பிரதநிதித்துவ ஜனநாயக ஒழுங்கினுடைய 'ஜனநாயகத் தன்மை'யை பலரும் விமர்சனம் செய்வதுண்டு. ஏனெனில், அவ்வொழுங்கின் கீழ் தேர்தல்கள் காலங்களுக்கு மாத்திரமே பிரதிநிதிகளும் , மக்களும் நெருங்கி வருகிறார்கள். பின்பு, இரு தரப்பினர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்கிறது. எனவே, ஒட்டு மொத்தமாக நோக்கும் போது 'தாம் மக்கள் பிரதிநிதிகள்' என்ற உணர்வை அரசியல்வாதிகளுக்கு ஏற்படுத்துவதிலும் , தமது பிரதிநிதிகள் மீது செல்வாக்குச் செலுத்தும் ஆற்றலை சமூகத்திற்கு மத்தியில் அபிவிருக்தி செய்வதிலும் 'பிரதிநதித்துவ ஜனநாயக ஒழுங்கு' தோல்வியடைந்து விட்டது என்பதே அதனை நோக்கி முன்வைக்கப்படும் விமர்சனங்களது மூல வேராகும்.

ஆனால். பிரதிநிதித்துவ ஜனநாயக ஒழுங்கின் கோளாருகளை தாண்டிச் செல்வதற்கான கருவிகளை உள்ளடக்கிய சிறிய அதிகார ஒழுங்காக உள்ளுராட்சி சபைகளை அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். காரணம், பிரதிநிதிகளை சந்தித்தல் , மக்களுடைய பிரச்சினைகளை அடிக்கடி நேரில் சென்று விசாரித்தல் மற்றும் தங்களது விமர்சனங்களை நேரடியாக பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தல் போன்ற பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான ஊடாட்டம் 'உள்ளுராட்சி சபைக் கட்டமைப்பில்' அதிகமானது என்பதாலாகும். அதாவது, பிரதிநிதித்து ஜனநாயகத்தினுடைய 'ஜனநாயகத் தன்மையை' செழிப்பான தளத்தில் பரீட்சிப் பார்ப்பதற்கு உள்;ளுராட்சி சபைகள் களமைத்துத் தருவாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
மேற்கூறப்பட்ட அனைத்துப் பதப் பிரயோகங்களையும், சொல்லாடல்களையும் இணைத்துப் புரிந்து கொள்ளும் போதுதான் 'உள்ளுராட்சி சபை' அதிகார ஒழுங்கை ஏன் அரசியல் கட்டமைப்புகள் கொண்டிருக்கின்றன? என்ற தத்துவத்தையும் , அதன் இலக்குகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக,, அரசியல் ரீதியாக மக்களைப் பயிற்றுவித்தல் , ஜனநாயக விழுமியங்களை அடிமட்டம் வரை கொண்டு செல்லல் , அரசியல் அதிகாரத்தின் பயன்களi நேரடியாக சமூகம் அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுத்தல் மற்றும் 'மக்கள் பிரதிநிதிகளே அரசியல் வாதிகள்' என்ற மனோநிலையை சமூகத்தில் விதைத்தல் மற்றும் தமது விவகாரங்களை தாமாக நிவர்கித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை விரிவுபடுத்திக் கொடுத்தல் போன்றன உள்ளுராட்சி சபை ஒழுங்கின் சில பரிமாணங்களும் , இலக்குகளுமாகும்.
இலங்கையின் உள்ளுராட்சி சபைகள் : சவால்களும் , சந்தர்ப்பங்களும்

துரதிஷ்டவசமாக இலங்கையில் உள்ளுராட்சி சபைகள் பொறிமுறையானது , மேற்கூறப்பட்ட அதன் இலக்குகளை அடைந்து கொள்ளவில்லை என்பதே பொதுவான அவதானமாகும். விளைதிறனும் , வினை திறனும் குன்றிய அரசியல் அதிகாரக் கட்டமைப்பாகவே அது தொடர்ந்தும் பொதுமக்களாலும் , அரசியல் கட்சிகளாலும் நோக்கப்படுகின்றன. அந்த வகையில் மேற்சொன்ன குறைபாடுகளில் சிலதை நிவர்த்திப்பதற்காகவும் மற்றும் அதன் சில இலக்குகளை அடைந்து கொள்ளும் நோக்குடனுமே 'வட்டாரமுறை' அறிகமும் செய்யப்பட்டன. அதன் பின்னரும் கூட உள்ளுராட்சி சபைகளது வினைதிறனை சுரண்டிக் கொள்வதற்கான வியூகங்களுடனேயே அரசியல் கட்சிகள் இயங்குகின்றன என்பதை களயதார்த்தமாகும். அதாவது, மக்கள் பிரதிநிதிகளுடைய 'பொறுப்புச் சொல்லல்' பண்பினை அதிகரிகச் செய்வதே வட்டார முறையின் பிரதான நோக்கமாகும். இன்னொரு வசனத்தில் சொன்னால் மக்களையும் , அவர்களது பிரதிநிதிகளையும் நெருக்கமாக்கும் வியூகமாகவே வட்டார முறை அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், 'கட்சிக்கு வாக்களியுங்கள் ! வேட்பாளரை பாhக்காதீர்' போன்ற பிரயோகங்களுக்கூடாக வட்டார முறையின் இலக்குகளிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அபேட்சர்கள் என்ற விடயம் கூர்ந்து அவதானிக்கத்தக்கது.

இதுபோக, சமகால இலங்கையின் உள்ளுராட்சி சபை அதிகார ஒழுங்கு எதிர்கொள்ளும் மற்றொரு மிக முக்கியமான கோளாரொன்றை சமூக விஞ்ஞானங்களுக்கான ஒன்றியத்தின் ஆய்வாளர் தஸூன் ஷானக கோடிட்டுக் காட்டுகிறார். சமீபத்தில் மாத்தரை மாவட்டத்தை சூழ அவர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கீழ்வருமாறு தனது அவதானத்தை அவர் முன்வைக்கிறார் :

'உள்ளுராட்சி சபை அதிகார அலகுகளது நோக்கங்களை ஆரம்பமாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது சமூகத்தின் சகல மட்டத்தினரையும் கொள்கை வகுப்பு செயற்திட்டத்தில் உள்வாங்கிக் கொள்வதே அதன் பிரதான இலக்காகும். மேலும்,; அரசியல் வெளியின் பங்கு தாரர்களாக அடிமட்ட மக்களையும் மாற்றியமைப்பதாகும். ஆனால், இன்று தேசிய அரசியல்வாதிகளின் அரசியல் அபிலாஷைகளை சூழவே உள்ளூர் அரசியல்வாதிகளும் இயங்குகின்றனர். அதனை விட, தேசிய அரசியல்வாதிகளது உள்ளூர் ஏஜன்டுகளாக அவர்கள் தொழிற்படுகிறார்கள். இதனால், தேசிய அரசியலினுடைய அத்துணை மோதல்களும் , குழிபறிப்புகளும் , பலவீனங்களும் உள்ளூர் மட்டத்திலும் வெளிப்படுகிறது. தேசிய கட்சிகளது 'அதிகார பலத்தை' உறுதி செய்து கொள்வதற்கான இடைக்காலக் கருவியாக பலபோது 'உளளு
ராட்சி சபைகள்' இலக்கு வைக்கப்படும் சூழமையும் தோற்றம் பெறுகின்றன. உள்ளுராட்சி சபைத் தத்துவத்திற்கும் , அதன் இலக்குகளுக்கும் மேற்சொன்ன நடைமுறை நேர் முரணானதாகும். ஏனெனில், உள்ளுராட்சி சபையை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வதிகளே தேசிய அரசியல் வாதிகளை விட பலமானவர்களாக இருக்க வேண்டும். அவர்களே மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களே தேசிய அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த வேண்டும். இதுவே உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்புலத் தத்துவமாகும்' என்கிறார் தஸூன் ஷானக.


உள்ளுராட்சி சபைகளுடைய வினைதிறனையும் , விளைதிறனையும் மறைமுகமாக கட்டுப்படுத்தும் வகையிலேயே மத்திய அரசாங்கமும் அதனைக் கையாள்கின்றன. குறிப்பாக, வளப் பகிர்வு மற்றும் வளமுகாமைத்துவம் சார்ந்த பரப்புகளில் மத்திய அரசின் கட்டுப்பாட்டற்ற தலையீடு உள்ளுராட்சி சபைகளது சுயாதீன இயக்கத்தை வரையறை செய்கிறது. மட்டுமன்றி,; பலபோது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளை விட 'தீர்மானமெனடுத்தல் பொறிமுறையில்' அதிகாரம் கூடிய நிறுவனங்களாக மத்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசக் காரியாலங்கள் தொழிற்படுகின்றன. மத்திய அரசாங்கத்தின் அல்லது அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் மறைமுக ஏஜன்டாக 'உள்ளுராட்சி சபைகள்' தொடர்ந்தும் இருப்பதற்கு இதுவுமொரு காரணமாகும். இன்னும், உள்ளுராட்சி சபைகளுடைய நிறுவன ஒழுங்கு , ஆளணி முகாமைத்துவம் மற்றும் நிதி முகாமைத்துவம் போன்ற பரிமாணங்களில் பாரிய பலவீனங்களும் , போதாமைகளும் ,மோசடிகளும் இடம்பெறுவதற்கும் மேற்சொன்ன மத்திய அரசாங்கத்தின் அல்லது தேசிய அரசியல்வாதிகளுடைய ஆசிர்வாதத்தின் கீழ் அது முகாமை செய்யப்படும ; நிலை காணப்படுவதே பின்னணியாகும். இவையனைத்தையும் தொகுத்து ஒட்டு மொத்தமாக நோக்கும் போது உள்ளுராட்சி சபைகளை 'ஓர் தனித்துவமான அதிகார அலகாக' நோக்கும் மனோநிலையில் பொதுமக்களும் இல்லை. சமகால இலங்கையில் உள்ள10ராட்சி அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் இன்னொரு பிரதான கட்டமைப்பியல் சவாலாக அதனை அடையாளப்படுத்தலாம்.

இறுதியாக, உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் களமிறங்கியிருக்கும் கட்சிகளும் , வேட்பாளர்களும் தமது தேசிய இமேஜூக்காக உழைப்பதனை விட, குறித்த அதிகார அலகின் தனித்துவமான அரசியல் இலக்குகளுக்காவும் உழைக்க வேண்டும். அதன் இலக்குகளை மக்களுக்கு மத்தியில் விழிப்பூட்ட வேண்டும். தமது தேர்தல்கள் விஞ்ஞாபனத்தில் உள்ளுராட்சி சபை தத்துவத்தின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கான நிகழ்ச்சி நிரல்களையும் உள்ளடக்க வேண்டும். தேர்தல்களில் வெற்ற பெற்ற பின்பும் கூட மத்திய அரசுடன் உள்ளுராட்சி சபைத் சீர்திருத்தங்களுக்காக போராட வேண்டும். அண்மையில்; உள்ளுராட்சி சபைத் சீர்திருத்தங்கள் தொடர்பாக பேசும் போது, அதற்கு மிக முக்கியமான முன்மொழிவொன்றை பேராசிரியர் ஜயதேவ உயன்கொட விவாதிக்கிறார். அதாவது, ஒவ்வொரு மாதமும் இடம்பெறும் பிரதேச சபை உறுப்பினர்களுடைய ஒன்று கூடல்களுக்கு குறித்த பிரதேசத்தில் இயங்கும் இயக்கங்கள் , அமைப்புகள் , சம்மேளனங்கள் மற்றும் கழகங்களது பிரதிநிதிகளை பார்வையாளர்காள அழைக்க வேண்டும் என்பதே அவரது ஆலோசனையாகும். மக்கள் மன்றத்திற்கு மத்தியில் 'பொறுப்புக் கூற வேண்டியவர்கள்' என்ற குறைந்த பட்ச மனோநிலையாவது உறுப்பினர்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவதற்கு அது வகை செய்யும் அதே நேரம் , உறுப்பினர்களது நடத்தைகளையும் , இயங்குதளத்தையும் புரிந்து கொள்வதற்கும் , அவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்கும் மக்களுக்கும் ஒரு வாய்ப்பாகவும் அமையும் எனவும் பேராசிரியர் உயன்கொட அபிப்பிரயாப்படுகிறார். இது போன்ற வித்தியாசமான கோணங்களில் உள்ளுராட்சிக் கட்டமைப்பை பலப்படுத்தும் ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் முன்வைக்க வேண்டும். விவாதிக்க வேண்டும்.
ஸகிபவ்ஸ் (நளீமி)
Zacky Fouz  FB
20/01/2018
Ramzy Razeek உள்ளூராட்சி அலகுகளை தேசிய அரசியலில் இருந்து வேறாக்கி அதற்குப் புறம்பாக விளங்க முயற்சிப்பது பிழையான அனுகுமுறையாகும். கடந்த காலங்களில் திஸ்ஸமகாராம பிரதேச சபை தேசிய மட்டத்தில் உரையாடலுக்கு உட்பட்டமை உள்ளூராட்சிமன்றங்களின் தேசிய ரீதியான முக்கியத்துவத்தையும் பங்களிப்பையும் வெளிக்காட்டுகிறது.
அதே போல் இஸ்தான்புல் மாநகராட்சி மன்றத்தின் முன்மாதிரி நிர்வாகமே துருக்கியில் பாரிய அரசியல் சமூக புரட்சிக்கு வழிவகுத்தது.



Ikram Naseer தமது பிரதேச சபை எல்லையின் வட்டாரப் பிரிப்பு குறித்த குறைந்த பட்ச பிரக்ஞை அற்றவர்களே பெரும்பாலும் வேட்பாளர்களாக உள்ளனர்... அதிகமாக கொந்தராத்துக்கார்களும், அரசியற் கட்சிகளால் தமது தனிப்பட்ட நலன்களை அடைந்து கொண்ட பினாமிகளுமே வேட்பாளர்களாக நிற்கிறார்கள்.... உள்ளூராட்சி மன்றங்களின் செயற்திறன் மேம்படுத்தப்படுவதிலையே மக்களின் உண்மையான அபிவிருத்தி தங்கியுள்ளது... இதற்கு முதலில் வேட்பாளர்களுக்கான தகுதிகள் வரையறை செய்யப்பட்ட வேண்டும்... சாதாரண அலுவலக உதவியாளராக இருப்தபதற்கே தகுதி பரீட்சிக்கும் நாம் தீர்மானம் எடுக்கும், திட்டமிடும், தலைமை வழங்கும் வகிபாகத்திற்கு அது குறித்த தகுதி பார்க்க மறந்து போகிறோம்.

Home                  Sri Lanka Think Tank-UK (Main Link)