Pages

Tuesday 24 July 2012

வரலாற்றில் வஞ்சிக்கப் படும் பூர்வீக வட புல அப்பாவி முஸ்லிம்கள்...!

1/



2/
 அமைச்சர் ரிஷாத் அவர்கள் யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்து வட புல தமிழ் மக்களுக்கு பாரிய அளவில் சேவைகளை செய்தவர், ஆனால் அவர் பிரதி நிதித்துவப்படுத்தும் முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதில் சமூகம் எதிர் பார்க்கின்ற சேவைகளை செய்ய முடியாத சூழ் நிலைகளின் கைதியாக அவர் இருந்து வந்துள்ளார் என்பதே உண்மை.


சர்வதேச சமூகமும் தென்னிலங்கை அரசும் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இருபத்தி நான்கு மணித்தியால கால அவகாசத்தில் விரட்டியடிக்கப் பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் புறக்கணிப்பினை காட்டுகின்ற அரசியல் இராஜ தந்திரத்தையே தொடர்ந்தும் கடைப் பிடிக்கின்றன.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மாத்திரமன்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதிலிருந்து குழுக்களாக பிரிந்து சென்று அரசியல் நடாத்தியவர்களும் முஸ்லிம் சமூகத்தின் பேரம் பேசும் வலிமையை தென்னிலங்கை பேரின சமூகத்தின் காலடியில் வைத்து பிரிந்து நின்று சராணகதி அரசியல் செய்வது வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களை அரசியல் அனாதைகளாக அல்லது பணயக் கைதிகளாக மாற்றியுள்ளது.

போருக்குப் பின்னரான அரசியலில் தமிழ் முஸ்லிம் உறவு மீளக் கட்டி எழுப்பப் பட வேண்டியதன் அவசியத்தை கொள்கையளவில் தமிழ் முஸ்லிம் தலைமகள் உணர்ந்திருந்த போதும் எந்த வொரு சமூகமும் செயலளவில் காத்திரமான இதய சுத்தியுடன் கூடிய நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிய வில்லை.

வட புலத்திலிருந்து விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப் பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் இன்றைய தமிழ்த் தலைமைகள் புலிகளைப் போன்றே பெரும் வரலாற்றுத் தவறினை இழைப்பதாகவே தற்போதைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. தமது வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்கின்ற முஸ்லிம்களை இரு கரம் நீட்டி வரவேற்க வேண்டிய ஒரு சமூகம் அவர்களது பூர்வீக இடங்களில் அத்து மீறிக் குடியேறி எந்த வித விட்டுக் கொடுப்பும் செய்யத் தயாரில்லாமல் அவர்களை மீண்டும் ஒருமுறை தென்னிலங்கைக்கே விரட்டியடிப்பதற்கான நகர்வுகளில் ஈடு படுவதாகவே தெரிகிறது.

அண்மைக் காலமாக அமைச்சர் ரிஷாத் அவர்களுக்கும் மன்னார் ஆயர் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை இரண்டு சமூகங்களுக்குமிடயிலான ஒரு முறுகல் நிலையாகவே பார்க்கப் பட வேண்டியுள்ளது, தங்களுக்கு நியாம் வேண்டி நிற்கும் இடம் பெயர்ந்த மக்கள் விடயத்தில் ஆயருக்குப் பின்னால் தமிழ் அரசியல் தலைமைகளும் புலம் பெயர்ந்த சமூகமும் நடாத்துகின்ற அரசியல் முஸ்லிம்கள் மனதில் ஆழமான வடுக்களை மீண்டும் ஏற்படுத்துகின்றது.

இன்று உப்புக்குள முஸ்லிம்கள் தமது வாழ்வாதார முயற்சிகளை மேற்கொள்வதற்காக தமது பூர்வீக கடற் தொழில் மையங்களை கேட்கின்ற பொழுது ஏற்பட்டுள்ள சர்ச்சை உண்மையில் கவலைக்குரிய விடயமாகும், நீதிபதி மீதான அச்சுறுத்தல், நீதி மன்றத்தின் மீதான தாக்குதல் என்பன ஏற்றுக் கொள்ளப் பட முடியாத துரதிஷ்ட வசமான நிகழ்வுகளாகும்.

நியாயமான ஒரு போராட்டத்தில் நாம் கைக்கொண்ட ஒரு பிழையான அணுகு முறை நமது எதிரிக்களுக்குத் தேவையான நியாயங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் இந்த அனாதரவான நிலைக்கு குழுக்களாக பிரிந்து நின்று பதவி அந்தஸ்துக்களுக்காக சுய நல மற்றும் சராணாகதி அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல் வாதிகளே பதில் கூற வேண்டும்.

நீதிபதி தான் சார்ந்த சமூகத்திற்கு சார்பான உத்தரவுகளைப் பிறப்பித்தாரா? அல்லது அமைச்சர் நீதிபதியை அச்சுறுத்தினாரா? அல்லது அமைச்சர் சொல்வதுபோல் நீதிபதி பொய் கூறினாரா என்ற விடயங்களை நாம் முறையீடு களுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் விட்டு விடுவோம்..ஆனால் இந்த உடனடி நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கின்ற அரசியல் இராஜ தந்திர நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்காமல் இருக்க முடியாது.

இன்று வட இலங்கை தமிழ்ச் சமூகம் தென்னிலங்கை அரசின் மீதான முழுக் கோபத்தையும் கேவலம் ஒரு மீன் வாடியை பிழைப்புக்காக கேட்டு நின்ற முஸ்லிம்களின் மீது காட்டுவது போல் தெரிகிறது, அதே போன்று தென்னிலங்கை எதிர்க் கட்சிகள் அரசின் மீதான தமது முழு அதிருப்தியையும் அந்த வட புல முஸ்லிம் களின் மீதும் அவர்களது பிரதிநிதி மீதும் காட்டுவதாகவே புலப்படுகிறது. இங்கு வஞ்சிக்கப் பட்ட வட புல முஸ்லிம்கள் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப் படுவதாகவே எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அரசுடன் சேர்ந்து அரசியல் செய்யும் முஸ்லிம் தலைவர்களை தம்முடன் இணைந்து வடகிழக்கில் அதிகாரத்தைக் கைப் பற்ற தமிழ்த் தலைமைகள் விடுக்கின்ற அழைப்பு எந்த அளவில் நியாயமானது என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது, விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப் பட்டு இரண்டு தசாப்தத்திற்கு மேல் தென்னிலங்கை அரசின் தயவில் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தமது பூர்வீக வதிவிடங்களுக்கு வரும் முஸ்லிம்களை இவ்வாறு தமிழ் சமூகம் நடாத்துகின்ற பொழுது அந்த தலைமைகளை முஸ்லிம்கள் எவ்வாறு நம்பு வார்கள்?

இன்று தெற்கிலும் வடக்கிலும் முஸ்லிம்கள் பெரும் அரசியல் இராஜ தந்திர பொறிகளுக்குள் சிக்கியுள்ளதாகவே தெரிகிறது, இந்தக் கையாலாகாத அரசியல் தலைமைகள் இல்லாவிட்டால் முஸ்லிம் சமூகம் இதனை விட சிறந்த ஒரு தலைமையை பற்றி சிந்தித்திருக்கலாம். குழுக்களாகப் பிரிந்து நின்று இந்த காங்கிரஸ்காரர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் குழி பறிப்பதிலும், கருவறுப்பதிலுமே தமது அரசியல் சாணக்கியத்தை வெளிப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

வட புல முஸ்லிம்களது மீள்குடியேற்றம் ரிஷாத் பதியுதீன் என்ற ஒரு தனி மனிதரின் விவகாரமல்ல, அது முஸ்லிம்களின் பெயரால் அரசியலுக்கு வந்துள்ள சகல முஸ்லிம் தலைமைகளினதும் கூட்டுப் பொறுப்பாகும்.

கிழக்குத் தேர்தலில் குதித்துள்ள முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து வட புல முஸ்லிம்களது மீள் குடியேற்றம் சம்பந்தமாக அரசுடன் அதி தீவிர பேச்சு வார்த்தைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், தேவைப் படின் சிவில் சமூகத் தலைமைத்துவங்களின் ஒத்துழைப்பையும் அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். முஸ்லிம் இளைஞர்களே சிந்தியுங்கள்..! (Lanka Muslim (Plus*))


Home          Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment