Pages

Saturday, 9 February 2013

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றும் கலாநிதி தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன் எழுதிய இந்நூல் ஆறு அத்தியாயங்களைக் கொண்டது. இந்திய சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் புதிய வகிபாகம், இலங்கையில் இந்தியாவின் நேரடித் தலையீடு, இலங்கையுடனான இந்தியாவின் தந்திரோபாய உறவு மற்றும் சர்வதேச நாடுகளின் தந்திரோபாய செயற்பாடுகள், யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை எதிர்கொள்ளும் சர்வதேசச் சவால்கள், இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் முக்கோணப்பாதுகாப்பு உறவு ஆகிய பெரும் அத்தியாயங்களில் இவ்விடயம் ஆராயப்படுகின்றது.

இந்து சமுத்திரப் பிராந்தியம் பற்றிய அறிமுகத்தை நூலின் தொடக்கத்தில் தரும் ஆசிரியர் இந்தியாவின் புதிய வகிபாகத்தையும் அதன் பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்தும் அலசிச் செல்கிறார். இலங்கையில் இந்தியாவின் நேரடித் தலையீடு பற்றி அவர் கூறும் போது இலங்கை இந்திய உறவில் ஏற்பட்ட சிக்கல்களையும் சவால்களையும் விபரிப்பதோடு இந்தியாவின் வயூகத்திற்குள் இலங்கை எவ்வாறு வீழ்கிறது என்பதையும் அதையொட்டி நிகழும் இந்திய ராஜதந்திர செயற்பாடுகளையும் இந்திய இராணுவத் தலையீட்டையும் அதன் பின் இந்திய ராஜதந்திரம் அடையும் வெற்றி தோல்விகளையும் விபரிக்கின்றார்.

இலங்கையுடனான இந்தியாவின் தந்திரோபாய உறவு, இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் இந்தியாவின் ஆதரவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், யுத்தத்தை ஆரம்பித்த போது ஏற்பட்ட மக்களின் இடப்பெயர்வு, அதன் பின் உறவுகளைப் பலப்படுத்துவதற்காக நடைபெற்ற உயர்மட்ட செயற்பாடுகள், கச்சதீவு விவகாரம், சேதுசமுத்திரத் திட்டம், எரிபொருள் மின்சக்தி, போக்குவரத்து, மருத்துவம், மீள்குடியேற்றம் கல்வி, சிறிய அபிவிருத்தி ஒத்துழைப்பு போன்ற பொருளாதாரக் கூட்டுறவுகள், அதில் தமிழகத் தலைவர்களின் வகிபாகம் குறித்தெல்லாம் ஆராய்கிறார்.

சர்வதேச நாடுகளின் தந்திரோபாய செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நோர்வேயின் பங்கு இலங்கையைப் பலப்படுத்திய ஐக்கிய அமெரிக்கா, அதன் பின் இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைவில் இந்தியா எடுக்கும் கவனம், இராணுவச் சமநிலைக்கான சீனாவின் உதவி, பாக்கிஸ்தானின் நேரடி உதவிகள், சமாதான செயற்பாட்டாளராக ஜப்பான், மனிதாபிமானச் செயற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபை வகித்த தளங்களும் விரிவாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை எதிர்கொள்ளும் சர்வதேசச் சவால்கள் என்ற அத்தியாயத்தில் யுத்தத்தினை முடித்துவைத்த உடனடிக் காரணங்கள், ஐ.நா நிபுணர் குழு, இலங்கை மீது, சுமத்திய யுத்தக் குற்றங்கள் (பக்.115), தருஸ்மன் அறிக்கை மீதான கருத்துக்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு யுத்தக் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை இலங்கையிடம் வலியுறுத்தல், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான குற்றச் சாட்டுகள், அரசாங்கத்தின் செயற்பாடுகள், சனல்4 தொலைக்காட்சி, ஐ.நா மனித உரிமையின் 19வது கூட்டத் தொடர் போன்றவை சவால்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் முக்கோணப் பாதுகாப்பு உறவைப் பொறுத்தவரையில் சீனாவின பொருளாதாரக் கொள்கை, எரிபொருளுக்கான கேள்வி, சீனாவின் கடல்வழித் தொடர்பாடல் முறை, இலங்கையின் சீனாவின் முதலீடு, சீனாவின் ஆபிரிக்கக் கூட்டுறவு, அதன் பின் நிகழும் ஐக்கிய அமெரிக்காவின் தந்திரோபாங்கள், பனிப்போரின் பின்னரான பாதுகாப்பு வலைப்பின்னல், பொருளாதார அச்சம் என இந்தியா, சீனா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய முக்கோண அதிகார உறவுகள் இலங்கையில் எவ்வாறு தொழிற்படுகின்றன என்பதை நூலாசிரியர் விளக்கிச் செல்கிறார்.
இணைய வாய்ப்புக்களைக் கொண்ட வாசகர்களுக்கு உதவும் வகையில் உசாத்துணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கட்டுரைகள், அவற்றின் நம்பகத் தன்மையில் விமர்சனங்கள் இருந்தாலும், இணையத் தளங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

தமிழ்ச் சூழலில் தமிழ் மட்டுமே அறிந்த வாசகப் பரப்பில் அரசியல் குறித்த ஆழமான, நடுநிலையான, ஆதாரபூர்வமான எழுத்துக்கள் மிகக்குறைவாகவே வெளிவரும் சூழலில் க. கிருஷ்ணமோகனின் இந்நூல் மிக முக்கியமான பங்களிப்பாகக் கருதவேண்டியுள்ளது. பெரும்பாலும் ஒட்மொத்த இலங்கையைப் பிரச்சினையையும் ஓரிரு இனத்துவ விடையங்களுக்குள் மாத்திரம் சுருக்கிக் கொள்ளும் மனோபாவம் மிகுந்த எழுத்துச் சூழலில் கிருஷ்ணமோகன் இலங்கை எதிர் கொள்ளும் சவால்களை மிகவிரிவான தளத்தில் கொண்டு சென்று ஆராய்வதாகத் தெரிகின்றது. ஆனால் போர் மேகங்களைப் போல் இலங்கையைச் சூழ்ந்துள்ள இவ்வல்லாதிக்க சக்திகளின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான வழிவகையை பரிந்துரைக்கும் போது, நூலின் இறுதியில் அவர் குறிப்பிடும் கருத்து விவாதப் பொருளாக மாறுகின்றது.

“முப்படைப் பலத்தை வைத்திருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளால் அடைய முடியாது போன கடின இலக்காகிய தமிழீழ தனியரசு என்ற கொள்கைக்காக தொடர்ந்தும் மனித உயிர்களைப் பலியிடுவதைத் தவிர்த்துவிட்டு இந்தியாவின் அணுசரனையுடன் ஐக்கிய இலங்கைக்குள் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்காத வகையில் தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பது நன்மையானதாகும்” என்று கூறி ஆய்வாளர் நூலை முடித்து வைக்கின்றார். இந்தக் கருத்துக்கு ஆதரவான தரப்பினர் இலங்கையில் இருக்கின்றனர். ஆனால் நாம் வெளியில் சென்று தீர்வுகளை யோசிப்பதற்கு நியாயமான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆயினும் வெளியில் நாம் பிரச்சினைகளைக் கொண்டு சென்ற அளவுக்கு பெரும்பான்மை சமூகத்திடம் எமது பிரச்சினைகளைக் கொண்டு செல்லவில்லை என்பது எனது கணிப்பாகும். தமிழீழம், கடல்கடந்த தமிழீழம் என்று ஒரு பக்கம் இருந்தாலும் இலங்கைக்குள் உண்மையான பங்கேற்பு நிறைந்த வெளிப்படைத் தன்மை கொண்ட சிறந்த ஜனநாயகத்தை உருவாக்குவதே தமிழீழத்தை உருவாக்குவதற்கு சமமான பணியாகும்.

இந்தியாவிற்கு அருகில் ஒரு குட்டித் தீவு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தன்னைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ராஜதந்திரம் தேவை என்று கூறுகிறார் பேராசிரியர் இந்திரபாலா. ஆனால் இந்த ராஜதந்திரத்தின் அடிப்படையாக இருப்பது எங்கள் பக்க தவறுகள்தான் என்பதை புரிந்து கொள்வதில்தான் ஈழத்தமிழ் தேசியவாதிகள் என்போரும் அந்தத் தேசியவாதிகளின் கருத்துக்களை மறுப்பின்றி ஆமோதித்து வரும் தமிழ் நாட்டு ஆதரவு சக்திகளும் தொடர்ந்து தடுமாற்றங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு முதிர்ச்சியற்ற போக்கே தொடர்கின்றது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும், கலாநிதி த. கிருஷ்ணமோகன், குமரன் வெளியீடு
தொண்ணூறுகளுக்குப் பின்னரான இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை எடுத்து நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். அது கொழும்பு, இந்தியாவை அச்சாணியாகக் கொண்டே தனது சர்வதேச உறவுகளைத் திட்டமிட்டு வருகிறது என்பதுதான். தொண்ணூறுகளுக்குப் பின்னரான இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்பதே ஒரு இந்திய முதன்மைவாதக் கொள்கைதான். ஆனால் இலங்கையின் இத்தகைய நகர்வு இந்தியாவின் மீதான விசுவாசத்தின் வெளிப்பாடல்ல. மாறாக தெற்காசியாவின் இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை ஆழமாகப் புரிந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடாகும்.

கொழும்பின் ராஜதந்திரம் குறித்து அவ்வப்போது பலரும் வியந்து பேசியிருக்கிறார்கள். இது பற்றி அதிகம் தமிழில் பேசியவர் ஈழத்தின் மூத்த முன்னால் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு ஆவார். கொழும்பின் ராஜதந்திரம் பற்றிய அவதானங்கள் எவையுமே மிகைப்படுத்தலான கூற்றும் அல்ல. இந்தியாவை முன்னிலைப்படுத்தித்தான் கொழும்பு தனது ஒவ்வொரு மூலோபாய நகர்வுகளையும் முன்னெடுத்து வருகிறது. இதனை கொழும்பு தனது பட்டறிவிலிருந்தே உள்வாங்கிக் கொண்டது.

இந்தியாவின் விருப்பங்களுக்கு மாறாக செயற்பட்டதன் விளைவாகவே 1987 இல் இந்தியா இலங்கைப் பிரச்சினையில் நேரடியாகத் தலையீடு செய்தது. இந்த அனுபவத்தையே கொழும்பு தனது பிற்கால வெளியுறவுக் கொள்கை நெறிக்கான அரிச்சுவடிப் பாடமாகவும் பற்றிக் கொண்டது. கொழும்பின் ஆளும் பிரிவினர் தங்களது ஒவ்வொரு மூலோபாய நகர்வுகளிலும் மிக நுட்பமாக இந்திய முதன்மைவாதத்தை உள்ளெடுத்துக் கொள்கிறது.

இந்தியா பின்வாங்கும் போது அதனைக் காரணங்காட்டியே இந்தியாவுடன் முரண்படும் சீனா பாகிஸ்தான் போன்ற சக்திகளை கொழும்பு அரவணைத்துக் கொள்கிறது. கொழும்பின் இந்த ராஜதந்திர அணுகுமுறையானது சதாவும் கொழும்பை அவதானித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது. இது கொழும்பின் கடந்த இருதசாப்தகால ராஜதந்திர நகர்வுகளுக்கு கிடைத்த மிக முன்னேறிய வெற்றியாகும்.
இந்தியா 1987 இல் நேரடியாகத் தலையிட்ட போது அது எவ்வாறு நீண்டகால நோக்கில் தமிழ் ம்க்களுக்கு சாதகமாக அமையக்கூடும் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்ட ஒரு சிங்களத் தலைவர் என்றால் அது இலங்கையின் முன்னால் ஜநாதிபதி ரனசிங்கப் பிரேமதாசா என்பதில் சந்தேகமில்லை. அதற்கு அடித்தளமிட்டவர் ஜே.ஆர் ஆவார். ஜே.ஆர் வேறு வழியில்லாமல் இந்தியாவுடன் உடன்பட வேண்டி ஏற்பட்டாலும் புலிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை புரிந்து கொண்டிருப்பார். புலிகள்-இந்திய மோதுகை பிரேமதாசா மிகவும் நுட்பமாகப் பயன்படுத்திக் கொண்டார். 

ஈழத்தமிழரின் பக்கமாக இருக்க வேண்டிய இந்தியாவை ஈழத்தமிழரைக் கொண்டே அப்புறப்படுத்தும் தந்திரோபாயத்தில் கொழும்பு வெற்றி பெற்றது. இந்த நகர்வில் நன்மை அடைந்தது கொழும்பே அன்றி சிறுபான்மை அல்ல. சிறுபான்மையின் நலனில் நின்று நோக்கினால் இது மிகப்பெரிய பின்னடைவாகும். அந்தத் தவறுதான் இன்றுவரை தொடர்கிறது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவிசார் தொடர்புகள் காலனித்துவக் காலத்திலும் அதற்கு முன்னரும் மிக நெருக்கமாகத்தான் இருந்து வந்துள்ளன. 1800 களில் இலங்கையின் கரையோர மாகாணங்களில் பரவிய தொற்று நோயால் 300 க்கும் மேற்பட்ட படைவீரர்கள் இறந்த போது கொழும்பு கட்டளைத் தளபதி சென்னைக்கு அறிவித்தவுடன் சென்னைப்படை திருகோணமலைக் கோட்டைக்கு பாதுகாப்பு வழங்கியது. 1879 இல் வரட்சியால் ஏற்பட்ட விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. 1867 இல் தம்பலகாம விவசாயிகளுக்கும் இந்தியாவிலிருந்துதான் விதை நெல் வழங்கப்பட்டது. ‘காலனித்துவ திகோணமலை’ என்ற நூலில் கலாநிதி சரவணபவன் அவர்கள் பல வரலாற்றுத் தகவல்களை தந்துள்ளார். இவை இந்தியாவிற்கும் இலங்கைக்குமான புவிசார் தொடர்பை தெளிவாகக் காட்டுகின்றன. எப்போதுமே இலங்கையில் ஒருவிடயம் என்றால் அதன் முதலாவது தொடர்பாளராக இந்தியாவே இருந்திருக்கிறது. மன்னர் யுகத்திலும்கூட தமக்கிடையே இருந்த பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் இலங்கை தென்னிந்திய மன்னர்களைத்தான் அழைத்துள்ளது. நவீன அரசியலிலும் இதுதான் நடக்கின்றது.

கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற யுத்த முறைகளைப் பின்பற்றி ஒரு நாட்டை அடிமையாக்குவது இன்று இயலாத காரியமாகும். இன்று உலகில் எங்காவது இரு நாடுகளுக்கிடையில் யுத்தம் இடம்பெறுமானால் அது நிச்சயம் உலக யுத்தமாக மாறிவிடும். அது உலக யுத்தமாக மாறும் பட்சத்தில் அதன் தாக்கத்திலிருந்து எந்த நாடும் தப்பிக்கவும் முடியாது. இன்று புதிய இலத்திரனியல் கருவிகளும் வந்துவிட்டன. பொத்தானை அழுத்தினால் பாரிய விளைவுகளை உண்டுபண்ணும் யுத்த தளபாடங்களும் வளர்ச்சியடைந்துவிட்டன. ஆனால் அவை ஏற்படுத்தப்போகும் பாரிய அழிவுகளையும் இன்றைய உலகம் அறிந்துவைத்துள்ளது. அவ்வாயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் பூமி சூனியப் பிரதேசமாக மாறிவிடும். இந்த அச்சம்தான் எவ்வளவு பெரிய வல்லரசாக இருந்தாலும் போரைக் கண்டு அஞ்சுகிறது. போரை ஆரம்பிக்கும் நாடே போரால் அழிந்துவிடும் அபாயம் உண்டு. ஒவ்வொருவருக்குமுள்ள அழிவின் அச்சமே அல்லாமல் ஐ.நா பாதுகாப்புச் சபை இருப்பதால் அல்ல.

ஆனால் வல்லரசு நாடுகள் தங்களின் அறிவியல் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, ராணுவப் பலம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு வளரும் நாடுகளையும் வளராத நாடுகளையும் அச்சுறுத்தி அந்நாடுகளைத் தங்கள் நாடுகளின் உற்பத்திகளுக்கான சந்தைகளாக பயன்படுத்தவே முயற்சிக்கின்றன. அந்நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதோடு அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களை, சிறுவணிகம், உள்ளக வணிக வலைப்பின்னல்கள் அனைத்தையும் பறித்தெடுக்கும் முயற்சிக்கு ‘பொருளாதார அபிவிருத்தி’ என்ற கவர்ச்சிகரமான கோஷங்களைப் பயன்படுத்துகின்றன.

வளர்ந்த நாடுகளின் சதிவலை ஒப்பந்தங்களில் இந்த நாடுகளும் கையொப்பமிட்டு சிக்கிக் கொண்டால் தங்களையும் தங்கள் நாடுகளின் பொருளாதார சுதந்திரத்தையும் முற்றிலுமாக இழக்கக்கூடிய அபாயமே ஏற்பட்டு வருகிறது. அதன் பின் அரசியல் சுதந்திரமும் படிப்படியாகப் பறிக்கப்படும். நாடாளுமன்றங்களும் சட்ட சபைகளும் வல்லரசு நாடுகளின் கைப்பாவையாக மாறிவிடும். இந்த இலக்கை அடைவதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் எல்லா வகையிலும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. வல்லரசுகளின் பொருளாதார அபிவிருத்தி ஆதிக்கம் எமது கொல்லைப் புறமாக நுழைந்து பின் அரசியல் அரியணையில் அமரும் கட்டம் நிச்சயம் உருவாகும். பொருளாதாரத்தில் நலிந்து போன நாடும் நலிந்து போன மக்களும் காலப்போக்கில் அடிமை நாடாகவும் அடிமை மக்களாகவும் மாறிவிடுவர். பொருளாதார சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் அரசியல் சுதந்திரம் ஆட்டங்கண்டுவிடும். பின்னர் நாடு ஒரு பெரிய அகதிமுகாம் நிலைக்குத் தள்ளப்படும். ஆக்கிரமிப்பு நாடுகளின் உணவு, நுளம்பு வலைக்கு கைநீட்டி நிற்க வேண்டி வரும்.

‘ஆசையை அறுத்துவிடு. ஆசையே அனைத்து அழிவிற்கும் காரணம்’ என்று உலகிற்குப் போதித்த அரசியல் பௌத்தம் எழுச்சி பெற்றுள்ள இந்நாடே வல்லரசுகளின் அடிமைப் பூமியாக மாறுவதை இந்த மண்ணில் அமைந்த அரசே வரவேற்பதும் வாழ்த்துச் சொல்வதும் செங்கம்பளம் விரிப்பதும் எத்தகைய விபரீத விளைவுகளை உருவாக்கும் என்பதை இலங்கை மக்கள் அனைவரும் எண்ணிப்பார்த்துச் செயல்பட வேண்டியுள்ளது. இந்த அவல நிலமை உருவாவதற்கு இலங்கை அரசு மட்டுமல்ல, இலங்கை வாழ் பல்லின மக்களும் காரணம்தான். ஒட்டுமொத்த இலங்கைத் துறைமுகங்களையும் அந்நிய சக்திகள் கையகப்படுத்திக் கொண்டிருக்கும் போது அது பெரும்பான்மையினர் பார்த்துக் கொள்வார்கள் எமக்குப் பொறுப்பல்ல என்று ஒதுங்குவது விவேகமானதாக இருக்காது. நமது பிரச்சினைகளை நாம்தான் தீர்க்க வேண்டும். வெளிநாடுகளை நம்புவதற்கு கடந்த கால அனுபவங்கள் நம்பிக்கை தருவதாகவும் இல்லை.

பௌத்த மதத்தின் உபபிரிவான வைபாசிக தத்துவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்ட தத்துவம் இன்றைய சூழலிலும் பொறுந்திப் போகின்றது. அதன் நோக்கம் ஆத்மீக அகப்பண்பாடு சம்பந்தப்பட்டது என்றாலும் இன்றைய அரசியலுக்கும் அரசியல் அதிகாரத்தைப் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றது. பௌத்தத்தின் வைபாசிகத் தத்துவம் இரண்டு கோட்பாடுகளை முன்வைக்கின்றது. ஒன்று சுபாவலக்ஷணம், மற்றது சாமான்ய லக்ஷணம். ஒவ்வொரு பொருளையும் அதன் இயல்பு நிலையில் இருக்கவிட வேண்டும். அது தன் இயல்பில் முகிழ்க்க வேண்டும் என்று சுபாவ லக்ஷணம் கூறுகின்றது. அதன் இயல்பில் தலையிடுவதை சாமான்ய லக்ஷணம் என்று அழைக்கப்படுகின்றது. அப்படி ஒன்றின் இயல்பில் தலையிட்டு அதன் இயல்பை, சுதந்திர சுபாவத்தை கெடுக்கக் கூடாது என்பதையே வைபாசிக பௌத்தம் வலியுறுத்துகின்றது. ஒவ்வொருவரும் தனது இயல்பில் பிற குறுக்கீடின்றி விடுதலையை அடைய வேண்டும் என்று அத்தத்துவம் கூறுகின்றது.

ஆனால் இக்கோட்பாடு இந்த முறையில் சமூக இயக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் போது பலவிபரீதங்களும் ஏற்பட முடியும். உதாரணமாக ஹிட்லர் போன்ற ஒரு அராஜகவாதி உருவாக்கும் இயக்கத்தில் எவரும் குறுக்கிடாது அதன் சுபாவத்தில் இயங்க விட்டுவிட வேண்டும் என்று சொன்னால் அது எங்கே போய் முடியும் என்பது நாம் அறிந்த்தே.
நிறைவேற்றதிகாரம் எமக்கு பேராபத்திலேயே முடிந்திருக்கின்றது. சில நன்மைகள் அதிலிருப்பதாகக் கூறப்பட்டாலும் அடுத்த கட்டத்தில் அந்த அதிகாரத்திற்கு வருகின்றவர் அதைப் போற்றியவராக மாற முடியும். முர்ஸி, எகிப்திய ஆட்சியில் தனது ஆட்சிக்காலத்திற்குள் அந்த நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சில சட்டத் திருத்தங்களை செய்யலாம் என்று முடிவு செய்து மாற்ற முற்பட்ட போது அதற்கு எதிர்ப்புக் கிளம்பவே கைவிட்டுவிட்டார். எந்தவொன்றும் பொதுத்தளத்திற்கு விட்டு மக்கள் கருத்துக்கணிப்பைப் பெற்று விவாதித்து உருவாக்குவதே ஆரோக்கியமான ஆட்சிமுறையாகும். அதுதான் ஜனநாயகத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் தன்மை வாய்ந்தது. எதிர்க்கட்சி, எதிர்க்குரல், மாற்று அபிப்பிராயம் எங்கு இல்லாமல் போகிறதோ அங்கு அதிகாரத் துஷ்பிரயோகம் திரைமறைவுத் திட்டங்கள், சுரண்டல் உருவாகுவதைத் தவிர்க்க முடியாது. இலங்கையிலும் எதிர்க்கட்சி ஒன்று வலுவிழந்து போகின்ற போது மாகாண சபை, பிராந்திய அதிகாரங்கள் எல்லாமே சுருக்கப்பட்டு மத்திய அரசு மட்டுமே எஞ்சி நிற்கும்.
எந்தவொரு ஆய்வும் அதை ஒட்டிய எதிர்வினையும் அகச்சார்பில்லாமல் இருப்பதில்லை. ஆனால் அவற்றையும் கடந்து தரவுகளின் நம்பகத்தன்மைகளையும் அவற்றுக்கான வியாக்கியானிப்புக்களையும் மிகவும் நிதானமாகவே நேர்மையுடன் விபரித்துச் செல்வது சிறந்த ஆய்வுக்குரிய நற்சான்றிதழாக்க் கொள்ளப்படுகின்றது. அந்த வகையில் ஆசிரியர் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகாரப் போட்டியும் இலங்கையின் இன மோதுகையும் எவ்வாறு கையாளப்படுகின்றது அல்லது அவற்றிற்கிடையே உள்ள இயங்கு விசைகள் எப்படித் தொழிற்படுகின்றன என்பதை ஒரு ஆய்வுப் பனுவலுக்குள் மிகச்சிறப்பாகக் கொண்டுவருகின்றார்.
இந்தியா, சீனா, அமெரிக்கா என்ற முப்பெறும் அதிகார மையங்கள் தமக்கிடையிலும் இலங்கையை முன்னிறுத்தியும் எவ்வாறான உபாயங்களை கடந்த போர் யுகத்திலிருந்து இதுவரை கையாண்டு வருகின்றது என்பதை ஆய்வுக்குரிய நியமங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த அதிகார தரப்புகள் எந்த வர்க்கங்கள் நலன்கள், தன்னிலைகள் போன்றவற்றைக் காப்பதற்காக போட்டியிடுகின்றன. அந்த வர்க்கங்கள் கொண்டிருக்கும் கருத்தியல்தளங்கள் (மனித உரிமைகள் என்ற பொதுப் பதாகையின் கீழ் மறைக்கப்படும் அமெரிக்கா மீறும் மனித உரிமை மீறல்கள்) போன்ற பின்னணிகளுடன் ஆசிரியரின் இந்த தகவல்களும் தரவுகளும் சித்தாந்த ரீதியாக பரிசீலிக்கப்படுமாக இருந்தால் இவ்வாய்வு இன்னும் வீரியம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாய்வுக்கான தரவு மூலங்கள் பெரிதும் இணையத்தளங்களையே சார்ந்துள்ளன. அரசியல் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இவை பெரிதும் உதவக்கூடியன. ஆனால் இதில் வரும் ஆய்வறிவாளர்கள் இலங்கைக்கு வெளியிலுள்ளவர்கள். அதேவேளை இவ்விணையத்தளங்களை இயக்கும் மறைமுக சக்திகளின் நம்பகத்தன்மைதான் அவை யாரால் இயக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும் என்பது இங்கு கூர்ந்து நோக்கத் தக்கது.

இலங்கையுடன் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று வல்லாதிக்க சக்திகளுக்கு வெளியேயும் சோவியத் ரஷ்யா, கியுபா போன்ற நாடுகளும் ஊடாடி உதவி வந்துள்ளன. அவை இலங்கையின் உள்விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தியுமுள்ளன. உதாரணமாக இலங்கையின் இடதுசாரி அணிகளின் பணிகளுக்குப் பின்னாலும் அவர்களின் கருத்தியலை வலுப்படுத்துவதிலும் இந்நாடுகளின் பங்களிப்புள்ளன. அவையும் இந்நூலில் இணைக்கப்படும் போது மேலும் பயனுறுதிவாய்ந்த விவாதக் களமாக இந்நூல் மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

(14.12.2012 அன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த நூல் அறிமுக விழாவில் ஆற்றிய உரை) (Idrees)

Home

No comments:

Post a Comment