Pages

Monday, 27 September 2010

முஸ்லிம் சிறுபான்மைக்கான பிக்ஹை நோக்கி - 03

நஸ்க் பற்றிய புதிய சிந்தனை

அல்குர்ஆன் மறுமைவரைக்கும் வழிகாட்டும் ஒரு நூல் என்பது முஸ்லிம் சமூகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அது கால, இட, வர்த்தமானங்களுக்கு ஏற்ப தனது வழிகாட்டலை வழங்கிச் செல்லும். அது மனித சமூகத்தை முழுமையாக நோக்கியே பேசுகின்றது. மனித சமூகத்திற்கு வழிகாட்டவும் மனித சமூகத்தில் தோன்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லவுமே அது இறக்கப்பட்டது. பிரச்சினை எக்காலத்தை, எவ்விடத்தைச் சேர்ந்ததாயினும் அதற்குத் தீர்வு சொல்லும் அல்குர்ஆன் வசனங்கள் இறக்கப்பட்ட காரணங்களிலிருப்பது, அவற்றை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பதை விளக்கவே. “படிப்பினை’ என்பது சட்டவசனத்தின் பொதுவான கருத்தைக் கொண்டே அமையும். அது இறக்கப்பட்ட காரணத்தை வைத்தல்ல என்ற உஸுலுல் பிக்ஹ் விதி இங்கு கருத்திற் கொள்ளப்படல் அவசியமாகும்.

அல்குர்ஆன் நிரந்தரமானது என்பதன் பொருள் அது தீர்வு காணவந்த மனித சமூகத்தின் பிரச்சினைகளும் சிக்கல்களும் நிரந்தரமானவை என்பதேயாகும். எனவே அல்குர்ஆன் நிரந்தமானது என்பதை ஏற்றுக் கொண்டால் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளும் நிரந்தரமானவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். இந்தப் பின்னணியிலேயே நாசிக் / மன்ஸூக் பற்றிய ஒரு புதிய சிந்தனை முன்வைக்கப்படுகின்றது. ஏற்கனவே இருந்த சட்டமொன்றை பின்னால் வரும் சட்டமொன்று செல்லுபடியற்றதாக்கும் என்பதே “நஸ்க்’ பற்றிய பழைய சிந்தனையாகும். ஆனால் ஒரு சட்டத்தை இன்னொரு சட்டம் செல்லுபடியற்றதாக்கும் என்பதைவிட, முன்னைய சட்டம் இறக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த அதே சூழல் மீண்டும் வருமாயின் அச்சட்டத்தை அச்சூழலில் பிரயோகிக்க முடியும் எனக் கூறுவதே புதிய சிந்தனையாகும். இக்கருத்தை இமாம்களான அல் பிகாயி, ரஷித் ரிழா, ஹிழ்ர் பெக், முஹம்மத் அல் கஸ்ஸாலி ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஷமா நன்ஸக் மின் ஆயத்தின் அவ்நுன்ஸிஹா’ என்ற வசனத்திற்கு விளக்கமளிக்க வந்த இமாம் ரஷித் ரிழா அவர்கள் இக்கருத்தையே தெளிவாக முன்வைத்துள்ளார்.

இஸ்லாம் அதன் வரலாற்றில் சட்டங்களை அமுல்படுத்தும் போது அதில் “படிமுறை – செயற்படுத்தல்’ என்ற ஒழுங்கைப் பின்பற்றியிருப்பதைக் காணலாம். இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு, வணக்க வழிபாடுகள், பிரசாரமென எல்லாத்துறைகளிலும் படிப்படியாகவே சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டு வந்திருக்கின்றது. இஸ்லாமிய இலட்சியவாத அரசொன்றை உருவாக்குவதற்கு முன்னர் சட்டத்தில் இப்படியொரு படிமுறைப் போக்கைப் பின்பற்றியே ஆகவேண்டும். சட்டத்தின் இறுதிக்கட்டத்திற்கு வரமுன் அதற்குத் தயார்படுத்தி எடுக்க ஒவ்வொரு கட்டத்திற்குமான சட்டங்கள் அவசியமாகும். எனவே, முஸ்லிம் சிறுபான்மையும் இந்தக் கருத்தில் நோக்கப்படலாம். அவர்கள் “தாருல் குப்ரில்’ வாழும் போது அவர்கள் மத்தியில் இஸ்லாத்தை எவ்வாறு பிரயோகிப்பது என்பதற்கு இச்சிந்தனை தேவைப்படலாம்.

சிறுபான்மைக்கான பிக்ஹ் சிலபார்வைகள்

இப்பகுதியில், மேலே நாம் தொட்டுக்காட்டிய இஸ்லாமிய சட்ட அடிப்படைகளில் இருந்து எவ்வாறு ஒரு முஸ்லிம் – சிறுபான்மை தனக்கான பிக்ஹை உருவாக்கலாம் என்பதற்கான சில அவதானங்களையே குறிப்பிட விரும்புகிறோம்.

1. குடியுரிமை

இஸ்லாமிய ஆட்சி இல்லாத பூமியில் முஸ்லிம் சிறுபான்மை வாழ முடியுமா என்பதை முன்னரும் நோக்கினோம். இங்கு அதற்கான சட்ட அனுமதி இருக்கிறதா என்பதையே தொட்டுச் செல்ல முயல்கின்றேன். அதாவது அந்நிய நாட்டில் ஒரு முஸ்லிம் பிரஜா உரிமை பெறுவதை அல்லது தங்கி வாழ்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா? உண்மையில், சர்வதேச இஸ்லாமிய உம்மத்தோடு எந்தத் தொடர்புமின்றி வெறுமனே செல்வம் சேர்ப்பதற்காக மட்டும் ஒரு முஸ்லிம் அந்நிய நாட்டில் தங்கிவிட்டால் அவன் பெரும்பாவியாகிறான். இதைக் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் பெரிய ஹராம்களில் ஒன்றாகக் கணிக்கின்றார். ஆனால், இஸ்லாமிய வாழ்வு முறையைக் கொண்டுவரும் நோக்கோடு தங்குவதை அவர் அனுமதித்துள்ளார்.

அந்நிய நாட்டின் சட்டங்களைப் பின்பற்ற முடியுமா? அதில் எந்தப் பகுதியைப் பின்பற்றலாம் என்பதைப் பொறுத்தவரையில், தெளிவான சட்டவசனங்கள் இல்லாத பகுதியில் (இஜ்திஹாதுக்குட்பட்ட பகுதிகளில்) அந்நிய அரசின் சட்டங்களுக்குட்பட முடியும் என்பது கலாநிதி யூசுப் அல் கர்ளாவியின் கருத்தாகும். ஆனால், இஸ்லாத்தின் அடிப்படைகளோடு முரண்படக் கூடிய விடயங்களிலெல்லாம் அந்நிய சட்டத்தைப் பின்பற்ற வேண்டுமென்பதில்லை. அத்தோடு “நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம்.’’ என்ற வசனத்தில் இருந்து ஷவாக்குரிமை’ பற்றியும் முஸ்லிம் சிறுபான்மை சிந்திக்க முடியும். தனது சிறுபான்மை வாக்குரிமைப் பலத்தைப் பயன்படுத்தி ஆட்சியையோ சட்டத்தையோ மாற்றப் போராட முடியும். அது பிரிதொரு தனியான ஆய்வை வேண்டி நிற்கிறது.

2 வணக்க வழிபாடுகள்

தஹாரா (சுத்தம்) நஜாஸா (அசுத்தம்), வுழு தொடர்பான விடயங்களில் கஷ்டத்தை நீக்கி, சட்டங்களை இலகுபடுத்திக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. நோய், பிரயாணம் போன்ற நியாயமான காரணங்களுக்காக இஸ்லாம் வழங்கியுள்ள சலுகைகளைப் பின்பற்றலாம்.

ஜும்ஆத் தொழுகை, பெருநாள் தொழுகைகளை சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னர் தொழுவதற்கு ஹனபி சிந்தனைப் பிரிவு அனுமதித்துள்ளது. இதை எந்தளவுக்கு ஏற்கலாம் என்பது குறித்து ஆராய்வது அவசியமாகும்.

ஆகக் குறைந்தது “ஜும்ஆ’த் தொழுகைக்காவது பெண்கள் பள்ளிவாசலுக்கு சமூகமளிப்பதை அனுமதிக்கலாமா? தொழுகையை நடாத்தும் போது ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே திரையிடுவதற்குச் சட்டத்தில் ஆதாரம் உண்டா? இமாமின் குரலை மட்டும் பெண்கள் கேட்டால் போதுமா? அவரது அசைவுகளை அவதானிக்க வேண்டிய அவசியமில்லையா? என்றெல்லாம் ஆராய வேண்டிய தேவை வணக்கவழிபாடு தொடர்பான விடயங்களில் உள்ளது.

3 கொடுக்கல் வாங்கல்

நவீன பொருளாதாரங்கள் வட்டியினடிப்படையிலேயே இயங்குகின்றன. வட்டியோடு சுழலும் நிறுவனங்களில் சேர்ந்து இலாபமுழைப்பதைப் பொறுத்தவரையில் அவற்றைக் கர்ளாவி அவர்கள் இரண்டுவகையாகப் பிரிக்கின்றார். ஒன்று, தொழிலின் அடிப்படையில் ஹராமாகக் கருதப்படும் நிறுவனங்கள். உதாரணமாக, மது, சிகரட், புகையிலை உற்பத்தி நிறுவனங்களைக் குறிப்பிடலாம். மற்றது, ஹராமாக்கப்பட்ட வட்டியை உழைக்கும் நிறுவனங்கள். இதை இஸ்லாம் திட்டவட்டமாகத் தடைசெய்துள்ளது. தொழில் அடிப்படையில் ஹலாலாக இருக்க அதன் மற்றொரு பகுதி ஹராத்தோடு தொடர்புடைய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் சில இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் அவற்றை அனுமதிக்க, வேறுசிலர் தடைசெய்துள்ளனர்.

வங்கி இலாபமாகக் கிடைக்கும் வட்டியை சமூகப் பணிகளுக்குப் பயன்படுத்தாமல் அழிவதை அல்லது வங்கியிலேயே அவற்றை விட்டுவைப்பதை கலாநிதி அவர்கள் ஆதரிக்கவில்லை. ‘ஸதகா’ என்ற கருத்தில் இல்லாமல் ‘நலன்’ (மஸ்லஹா) என்ற வகையில் ஏழைகளுக்கு அவற்றைச் செலவளிக்க முடியும் என்ற கருத்தை அவர் தெரிவிக்கின்றார்.

பொதுவான செல்வத்திலிருந்து யாரும் பயன்பெறமுடியும். ஆனால் வங்கியோடு தொடர்புகொண்ட குறிப்பிட்ட நபர் வங்கி இலாபத்தைப் பயன்படுத்துவதே ஹராமாகும். அச்சட்டம் மற்றவர்களுக்குப் பொருந்தாது. பள்ளிவாசல் கட்டுதல், குர்ஆனைப் பதிப்பித்தல் போன்றவற்றில் இச்செல்வத்தை செலவிடமுடியும். இத்தகைய பணியை மேற்கொள்பவர்களுக்கு பன்மடங்கு கூலிகிடைக்கும். குறிப்பிட்ட நபர் ஹராத்தைவிட்டுத் தவிர்ந்து கொள்வதோடு தனது தேவைகளுக்கு அதனைப் பயன்படுத்தவுமில்லை. இங்கே நன்மைக்கு ஓர் ஊடகமாக அவர் விளங்குகின்றார். செல்வத்தைக் கொண்டு முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றார். ஆனால் ஸதகா செய்த கூலி அவருக்குக் கிடைக்காது.(9)

இறுதியாக, இங்கே முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் எதுவும் முடிந்த முடிவுகள் அல்ல. முஸ்லிம் சிறுபான்மைக்கென்று ஒரு பிக்ஹை – வாழ்வொழுங்கை எவ்வாறு வகுக்கலாமென்பதற்குச் சில சமிக்ஞைகளே இவை. எனவே சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் புத்திஜீவிகள் இத்துறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது பயன் மிக்கதாய் அமையும். (Idrees (Plus*))

Plus*; The Holy Quran says; ....மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்.’’ (4:28)

No comments:

Post a Comment