Pages

Monday 27 September 2010

முஸ்லிம் சிறுபான்மைக்கான பிக்ஹை நோக்கி - 02

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்வதை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?

தாருல் இஸ்லாத்திற்கு வெளியே ஒரு முஸ்லிம் வாழ்வதை அனுமதிக்கும் நேரடி ஆதாரங்கள் எதுவும் அல்குர்ஆனிலோ சுன்னாவிலோ இல்லை. ஆனால் அவ்வாறு வாழ்ந்ததற்கான சான்றுகள் பல காணப்படுகின்றன.

யூசுப் (அலை) அவர்கள் அந்நிய அரசின் கீழ் ஓர் அமைச்சராக இருந்து அந்நாட்டு மக்களுக்கு ஏற்படவிருந்த பெரும் பஞ்சத்தைத் தடுத்து நிறுத்தி, அவர்களைக் காத்ததாக சூறா யூசுப் கூறுகின்றது. ஆனால் யூசுப் (அலை) அவர்கள் வாழ்ந்த சமூகம் ஜாஹிலிய்ய சமூகமாக இருந்தது. அந்நாட்டு யாப்பிலும் இஸ்லாம் இருக்கவில்லை. இறை சட்டமில்லாத பூமியில் பொதுவாகவே அநீதியும் அராஜகமும் பண்பாட்டு வீழ்ச்சியும் இருக்கும். குறிப்பாக அரண்மனைகள் ஒழுக்க வீழ்ச்சிக்குப் பெயர் போன இடமாக விளங்கிற்று. யூசுப் (அலை) அநியாயமாகத் தண்டிக்கப்பட்டார். ஆட்சியில் அமர்ந்த பின்பும் யூசுப் (அலை) யாப்பில் மாற்றம் கொண்டு வந்ததாகவும் இல்லை. ஓர் உபாயத்தைக் கையாண்டு தனது சகோதரனைத் தன்னோடு இருத்திக் கொள்கின்றார்கள். (அத்தியாயம் 12)

அஷ்ஹமா பின் அப்ஜர் அந்நஜ்ஜாஷி ஹபஸாவின் மன்னராக இருந்தார். அரபியில் இவரது பெயர் அதிய்யா. நஜ்ஜாஷி என்பது புனைப்பெயர். நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் இவர் இஸ்லாத்தைத் தழுவினார். ஆனால் ஹிஜ்ரத் செய்ய வில்லை. ஹபஷாவுக்கு சென்ற முஸ்லிம்களுக்குப் பேருதவி புரிந்தார். (ஆதாரம்: அல் இஸ்ஸாபா இப்னு ஹஜர் அல் அஸ்கலானி 1:109)

இவர் தொடர்பாகவும் ஸஹீஹுல் புகாரியில் நான்கு ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இவர் மரணித்த போது இறை தூதர் (ஸல்) ஜனாஸா தொழுகையை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். மதீனா இஸ்லாமியப் பூமியாக மாறியதும் நஜ்ஜாஷி மன்னரிடமிருந்த முஹாஜிர்கள் விடைபெற்றுச்செல்லும் போது அவர் இறைத்தூதருக்கு எழுதிய கடிதம் நோக்கத்தக்கது.

“நஜ்ஜாஷி அஷ்ஹமா, முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எழுதிக் கொள்வது இறைத்தூதரே, சமாதானமும் அருளும் உங்கள் மீது உண்டாவதாக! இறைத்தூதர் அவர்களே. மக்காவில் இருந்து எமது நாட்டுக்கு முஹாஜிர்களாக வந்த உங்கள் தோழர்களை நான் மீண்டும் உங்களிடம் அனுப்பிவிட்டேன். ஹபஷா வாசிகள் அறுபது பேரோடு எனது மகனையும் உங்களிடம் அனுப்பி வைக்கின்றேன். இறைத்தூதரே, அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களிடம் வந்துவிடுவேன். நீங்கள் சொல்வதெல்லாம் சத்தியம் என்று நான் சாட்சி கூறுகின்றேன். இறைத்தூதருக்கு சாந்தியும் இறையருளும் உண்டாவதாக.’’(5)

மனிதத் தேவைகள், நிர்ப்பந்தங்கள், நியாயமான காரணங்கள், விதிவிலக்கல்கள், சூழ்நிலைகள் என்பவற்றையும் கருத்திற் கொண்டே அல்லாஹ் சட்டங்களை இயற்றியுள்ளான். அவன் இயற்றிய சட்டங்களைப் பின்பற்றுவதில் மனிதன் சிரமங்களை எதிர்நோக்குவான் என்பதால் சூறா அல் பகறாவின் இறுதி வரிகள் இப்படிக் கூறுகின்றன: “இறைவா! எமக்கு முன்வந்தோருக்குப் பெரும் பொறுப்புக்களைச் சுமத்தியது போன்று எம்மீதும் அதிக பாரத்தைச் சுமத்திவிடாதே!’’ (2:286) என்று அடியார்கள் கேட்க அல்லாஹ் “ஆம்’’ என்று கூறினான். (ஆதாரம்: முஸ்லிம்)
அல்லாஹ் தனது தூதர் ஒருவரைப் பற்றி முன்னைய வேதம் ஒன்றில் பின்வருமாறு வர்ணிக்கின்றான். “அவர் மக்களுக்கு நன்மையை ஏவுகின்றார். தீமையைத் தடுக்கின்றார். தூய பொருட்களை ஹலாலாக்குகின்றார். தீய பொருட்களை ஹராமாக்குகின்றார். மேலும் அவர்களின் கஷ்டத்தை, அவர்களின் மீதிருந்த விலங்குகளை அவர் விடுவிக்கின்றார்.’’ (7:157)

நோன்பு பற்றிய வசனத்தின் இறுதியில் “அல்லாஹ் உங்களுக்கு இலேசையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தை விரும்பவில்லை.’’ (2:185) என்று வருகிறது.

திருமணம் முடிக்க அனுமதிக்கப்படாதோரைப் பற்றிய வசனங்களைத் தொடர்ந்து அல்குர்ஆன் “அல்லாஹ் உங்களுக்குக் கஷ்டத்தைக் குறைக்கவே விரும்புகின்றான். மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்.’’ (4:28) என்று கூறுகின்றது.

சுத்தம் பற்றிய ஆயத்தை அடுத்து “அல்லாஹ் உங்களுக்குக் கஷ்டத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.’’ (5:6) என்று கூறுகின்றான். இந்த சட்ட வசனங்களின் பின்னணியில் நின்று இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் சில சட்டவிதிகளை உருவாக்கியுள்ளதை நாம் அவதானிக்க முடியும். அவற்றை இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

கஷ்டம் இலகுவை வேண்டி நிற்கும்

“அல்கவாயிதுல் பிக்ஹிய்யா’ (இஸ்லாமிய சட்டவிதிகள்) பற்றி விளக்கும் எல்லா நூல்களும் ஒத்துக் கொண்ட மிகத்தெளிவான ஒர் அடிப்படை விதியாக இது அமைகிறது.

இந்த விதிக்கேற்ப இஸ்லாமியக் கடமைகளில் நோய், பிரயாணம், அறியாமை போன்ற நியாயமான காரணங்களுக்காக சலுகைகளும் இலகுபடுத்தல்களும் சட்டமாக்கப்பட்டுள்ளதைக் காணலாம். “அல்லாஹ் அவனுக்கு மாறுசெய்வதை வெறுப்பது போன்று அவன் அளித்துள்ள சலுகைகள் பின்பற்றப்படுவதை விரும்புகின்றான்.’’

சுத்தம், தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற அத்தியாயங்களில் இத்தகைய சலுகைகளையும் இலகுபடுத்தல்களையும் நிறையக் காணலாம். இவை தேவைப்படும் இடங்களில் பிரயோகிக்கலாம் என்பதில் எந்தக் கருத்து முரண்பாடும் கிடையாது.

நிர்ப்பந்தம் தடுக்கப்பட்டவற்றை ஆகுமாக்கும்

இஸ்லாமிய சட்டத்தில், மனிதனுக்கேற்படும் நிர்ப்பந்தங்கள் அழுத்தங்களின் போது தடை செய்யப்பட்ட விடயங்களில் விதிவிலக்களிக்கப்படுவதை இது குறிக்கும். இதுவே “நிர்ப்பந்தம் தடுக்கப்பட்டவற்றை ஆகுமாக்கும்’ என்பது பிரபல்யமான சட்டவிதியாக மாறியது. இவ்விதியைப் பூரணப்படுத்தும் வகையில் “நிர்ப்பந்தத்தின் போது அனுமதிக்கப்பட்டவை அதன் அளவுக்கேற்பப் பிரயோகிக்கப்படும்’, “தேவை தனியானதோ பொதுவானதோ, (தேவை) நிர்ப்பந்தத்தின் தரத்தில் வைத்து நோக்கப்படும்’ என்பன போன்ற உபவிதிகள் உருவாக்கப்பட்டன.

தடுக்கப்பட்ட உணவுப் பொருட்களைக் குறிப்பிட்ட பின்பே அல்குர்ஆன் இந்தச் சட்டம் பசிபோன்ற நிர்ப்பந்த நிலைகளில் விதிவிலக்குப் பெறுவதாகக் கூறுகின்றது. இவ்வாறு அல்குர்ஆனில் நான்கு இடங்களில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு இடங்கள் மக்கி சூறாக்கள் (அல்அன்ஆம், அந்நஹ்ல்) ஆகும். மற்றவை இரண்டும் மதனி சூறாக்கள் (அல்பகறா, அல்மாயிதா) ஆகும்.

இதில் பாவத்தை விரும்பாமலும் மனோ இச்சைக்கு அடிமைப்படாமலும் பிறர் மீது அத்துமீறாமலும் தேவைக்கேற்ற அளவை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்பதே இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்தாகும். “கைர முத்தஹாலிபின் லி இத்மின்’’, “ஹைர பாகின் வலா ஆதின்’’ என்ற சட்ட வசனங்களில் இருந்து இக்கருத்து பெறப்பட்டுள்ளது.(6)

தனிமனிதனுக்கு நிர்ப்பந்தம் வருவது போன்று ஒரு சமூகத்துக்கும் நிர்ப்பந்தங்கள் வரமுடியும். இஸ்லாமிய சமூகம் போராட வேண்டிய அவசியம் ஏற்படும் போது சாதாரண நிலையில் அனுமதிக்கப்படாதவை தளர்த்தப்படுவதை ஒருவர் அவதானிக்கலாம். பனு நுழைர் என்ற யூதக் கோத்திரம் ஒப்பந்தத்தை மீறியபோது அவர்களுக்கெதிராகப் போர் தொடுக்க வேண்டி ஏற்பட்டது. அப்போது அவர்களைச் சரணடையச் செய்வதற்கு அவர்களுக்கு அரணாக இருந்த மரங்கள் பல வெட்டப்பட்டன. இதை சூறா அல்ஹஜ்ஜின் ஆரம்பப் பகுதியில் அல்லாஹ் விளக்கியுள்ளான்.(7)

இந்தப் பின்னணியில் நின்று பார்க்கும் போது, முஸ்லிம் சிறுபான்மை பெரும்பான்மையினது ஆக்கிரமிப்பிற்கு மத்தியிலே வாழவேண்டி ஏற்படுகின்றது. பெரும்பான்மையின் ஆயுதப் படையெடுப்பை விட அதன் கலாசாரப் படையெடுப்பே சிறுபான்மையின் அடையாளத்தை அழிக்கும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். இந்நிலையில் அது தனக்கென ஒரு பிக்ஹை உருவாக்கிக் கொள்வது இவ்வபாயத்தை எதிர் கொள்வதற்குச் சிறந்த கவசமாகும்.

கால, இட, வர்த்தமானங்களுக்கேற்ப சட்டத்தீர்ப்புக்கள் மாற்றமுறல்

இறை சட்டவசனங்கள் ஒவ்வொன்றையும் தனியாகப் படித்துப் பார்க்கும் போது அவை மனிதனுக்கு நலன்களைப் பெற்றுக் கொடுக்கவும் அவனுக்கேற்படும் அநீதிகளை நீக்குவதற்குமே அருளப்பட்டுள்ளன என்பதை உணரமுடியும். சட்டவசனங்களை விளக்கும் போது அவற்றை அமுல்படுத்தும் முறையையும் கவனத்திற் கொள்வது அவசியமாகும். கால, இட, வர்த்தமானங்கள் மாறினால் ஒரு சட்ட அறிஞன் ஒரே நிலைப்பாட்டில் எப்போதும் நின்று விடக் கூடாது. கிளையம்சங்களில் தீர்ப்புச் சொல்லும் போது இஸ்லாமிய ஷரிஆவின் பொதுவான நோக்கங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

இது பற்றி இமாம் இப்னுல் கையும் அவர்கள் தனது புகழ்பெற்ற நூலான “இஹ்லாமுல் முவக்கியீனில்’ பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “காலம், இடம், சூழ்நிலை, பழக்கவழக்கம், நோக்கங்கள் மாறுவதற்கேற்ப பத்வாவும் மாற்றமடையும்…’’

இது மிகவும் பயனுள்ள ஒரு சட்டப் பகுதியாகும். அறியாமை காரணமாக இஸ்லாமிய ஷரிஆவில் பாரிய குளறுபடிகள் நடந்துள்ளன… இஸ்லாமிய ‘ஷரிஆவின் அடிப்படை இம்மையிலும் மறுமையிலும் மனிதர்களுக்கு நலன்களைப் பெற்றுக் கொடுப்பதாகவே அமைந்துள்ளது. அல்லாஹ்வின் சட்டம் முழுவதும் நீதியானது. அருள் நிறைந்தது. நலன்களைக் கொண்டுவருவது. அவை அனைத்துக்கும் ஆழ்ந்த நோக்கமுண்டு.

நீதியாகவோ அருளாகவோ அமையாத, நலனைக் கொண்டுவராத, ஆழ்ந்த நோக்கம் எதுவுமில்லாத ஒவ்வொரு சட்டமும் ஷரிஆவின் பாற்பட்டதல்ல. அதற்கு விளக்கங்கள் கொடுத்து நியாயப்படுத்தினாலும் சரியே…(8)

எனவே தவிர்க்க முடியாத சூழலில், தாருல் இஸ்லாத்தில் வாழவேண்டிய முஸ்லிம்கள் தாருல் ஹர்பில் வாழவேண்டி ஏற்பட்டால் சட்டங்களிலும் மாற்றம் ஏற்படுவதனை இஸ்லாம் அனுமதிக்குமா?  (Idrees (Plus*))  (தொடரும்.....)

Plus*; The Holy Quran says; ....மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்.’’ (4:28)
Home                 Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment