Pages

Monday, 27 September 2010

முஸ்லிம் சிறுபான்மைக்கான பிக்ஹை நோக்கி - 01

“அந்நியப் பெரும்பான்மைக்கு மத்தியில் வாழும் மனிதக் குழுமத்தையே நாம் சிறுபான்மை என்கிறோம். தற்போது உலகில் முஸ்லிம் சிறுபான்மையினரின் எண்ணிக்கை ஆயிரம் மில்லியனையும் தாண்டிவிட்டது. வருடாந்த சனத்தொகை 25 மில்லியனாக அதிகரித்துச் செல்கின்றது. சனத்தொகை அதிகரிப்பை விடவும் அவர்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார, கல்வி, சமூகப் பிரச்சினைகள் பன்மடங்காக அதிகரித்துச் செல்கின்றன. பெரும்பான்மைக்கு மத்தியில் தமது அடையாளத்தை இழந்து விடாமல் தக்கவைத்துக் கொள்வதே அவர்கள் எதிர்நோக்கும் மிகப் பெரும் சவாலாகும். இது முஸ்லிம் சிறுபான்மை பற்றி, ஒரு வரன்முறையாக ஆற அமரச் செய்யப்பட்ட ஆய்வு முயற்சியல்ல. ஆய்வுக்கான ஒரு முன்முயற்சி மாத்திரமே எனலாம்.’

முஸ்லிம் சமூகம்

முஸ்லிம் என்பவன் ஒரு இனத்தைச் சேர்ந்தவன் அல்ல. இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் மதமுமல்ல. அது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். இஸ்லாம் மனிதர்களை கொள்கையின் அடிப்படையிலேயே பிரிக்கின்றது. இனம், மொழி, நாடு எனப் பிரித்துப் பார்ப்பதில்லை.

“சமூகமின்றி இஸ்லாம் இல்லை. தலைமைத்துவம் இன்றி சமூகமில்லை. பைஅத் (சத்தியப் பிரமாணம்) இன்றி தலைமைத்துவம் இல்லை.’’ என்ற உமர் (ரழி) அவர்களின் கூற்று இஸ்லாம் பற்றிய இரத்தினச் சுருக்கமான வரைவிலக்கணமாகும்.

“சமூகமின்றி மனிதன் இல்லை. சட்டமின்றி சமூகமில்லை.’’ என்ற இமாம் இப்னு கல்தூனின் கருத்தும் இங்கு நோக்கத்தக்கது.

இதன் கருத்து இஸ்லாம் என்பது சமூகப் பரிமாணம் கொண்டதாகவே இருக்க முடியும். இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் தனிமனிதர்கள் சிலரோ அல்லது ஒரு குழுவோ நடைமுறைப்படுத்திவிட்டுச் செல்வதல்ல.

“யார் சமூகக் கட்டுக்கோப்பை விட்டும் ஒரு சாண் பிரிந்து செல்கின்றாரோ அவர் இஸ்லாம் எனும் வளையத்தைத் தனது கழுத்தை விட்டும் கழற்றியவராவார்.’’ (ஆதாரம்: அபூதாவுத்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“அவர் தொழுது நோன்பு நோற்று ஹஜ் செய்தாலுமா? என்று சஹாபாக்கள் கேட்க அவர் தொழுது நோன்பு நோற்று ஹஜ் செய்து தன்னை ஒரு முஸ்லிமென்று நம்பி இருந்த போதிலும் சரியே.’’ என்றார்கள் இறைத் தூதர் (ஸல்) அவர்கள். ( ஆதாரம் : அஹ்மத் )

அதாவது சில மனிதர்கள் தனிப்பட்ட முறையில் சில வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிச் செல்வது இஸ்லாமல்ல. இஸ்லாம் கூறும் சமூக அமைப்பை உருவாக்கிக் காட்டுவதே “இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தல்’ என்பதன் சரியான அர்த்தமாகும்.

ஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அது தனக்கெனத் தனியான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்டுள்ளது. பிரபஞ்சம், மனிதன் வாழ்வு, கடவுள் பற்றி இஸ்லாத்திற்கு தனியான கொள்கைகள் இருக்கின்றன. இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாடு அதனை மிக அழகாக விளக்குகின்றது. அவ்வாறே சமூக வாழ்வு பற்றிய இஸ்லாத்தின் சிந்தனை தனித்துவமானது. தனிமனிதன், குடும்பம், அரசு என சமூக வாழ்வின் ஒவ்வொரு அலகுக்குமான உரிய வழிகாட்டல்களை மிக அழகாக விளக்குகின்றது.

உளவியல் பற்றிய இஸ்லாத்தின் கருத்துக்கள் மிகத் தெளிவானது. மனித உள்ளம், அதன் உணர்வுகள், அதன் வளர்ச்சி, அதன் அழிவு, அதை அழிக்கும் காரணிகள் பற்றி இஸ்லாத்தின் “தஸவ்வுப்’ பகுதி விளக்குகின்றது. இஸ்லாத்திற்கென்று ஒரு பொருளியல் திட்டம் இருக்கின்றது. அதன் செல்வப் பங்கீடு வலது, இடதுசாரி சிந்தனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அல்குர்ஆனின் வரலாற்றுத் தத்துவம் சமூகங்களின் வரலாறுகளையும் அதனை ஆளும் சமூக விதிகளையும் அதன் எழுச்சி வீழ்ச்சிகளையும் அழகாக விளக்குகின்றது.

எனவே ஒரு முஸ்லிம், மதம் வேறு சமூகம் வேறு, மதம் வேறு அரசு வேறு, மதம் வேறு பொருளாதாரம் வேறு என்ற மதச் சார்பற்ற சிந்தனையை ஏற்றுக் கொள்ள முடியாது. இம்மை மறுமை என்றோ, உடல் ஆன்மா என்றோ அவனால் வாழ்வைக் கூறுபோட்டு நோக்க முடியாது. ஒரு முஸ்லிமின் வாழ்வு முழுமையான ஒரு கோட்பாட்டைக் கொண்டிருப்பதால் “எம்மதமும் சம்மதம்’ என்ற அழைப்புக்கும் அவனிடம் அங்கீகாரமில்லை. அதே நேரம் வணக்க வழிபாடுகளில் மட்டும் மூழ்கிக் கொண்டே பிற சமூகத்தின் சமூக வாழ்வோடு இணைந்து உருத்தெரியாமல் சிதைந்து போகவும் முடியாது.

இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய அறிஞர்கள் உலகை இரண்டுவகையாகப் பிரிக்கின்றார்கள்.

1 தாருல் இஸ்லாம்


2 தாருல் குப்ர்

இப்பிரிப்பு அங்கு வாழும் மக்களின் நம்பிக்கைக் கோட்பாட்டை வைத்தல்ல. அப்பூமியை ஆளும் சட்டத்தை வைத்தே இவ்வாறு பிரிக்கப்படுகின்றது. இறை சட்டத்தால் ஆளப்படும் பூமி தாருல் இஸ்லாம் எனப்படும். அங்கு வாழும் மக்களின் நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சரியே. இறை சட்டத்திற்குப் புறம்பான சட்டங்களால் ஆளப்படும் பூமி தாருல் குப்ர் எனப்படும். அங்கு வாழ்வோரின் நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சரியே!

முஸ்லிம்கள் எகிப்தை வெற்றி கொண்டதும் அது தாருல் இஸ்லாமாக மாறியது. ஆனால் அங்கு வாழ்ந்த பெரும்பான்மை மக்கள் இஸ்லாத்தைப் பின்பற்றவில்லை. நீண்டகாலமாக எகிப்தின் நிலை அவ்வாறே இருந்தது. முஸ்லிம்கள் இந்தியாவைக் கைப்பற்றிய போது அதன் பெரும்பான்மை சமூகம் தத்தமது மதங்களையே பின்பற்றினர். ஆனால் இஸ்லாமிய சட்டங்களால் ஆளப்பட்டதால் அது தாருல் இஸ்லாம் என்று அழைக்கப்பட்டது.

ஷாம் தேசத்தில் 200 ஆண்டுகளாக சிலுவை வீரர்களால் ஆளப்பட்ட சிற்றரசுகள் பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்டிருந்தும் அவை தாருல் குப்ர் ஆகவே கணிக்கப்பட்டது. காரணம் அது அல்லாஹ்வின் சட்டத்தால் ஆளப்படவில்லை.

இஸ்லாமிய சமூகம் என்பது இறை சட்டத்தால் ஆளப்படும் சமூகமாகும். அதாவது இஸ்லாமியக் கொள்கைகளும் கோட்பாடுகளும் நடைமுறைகளும் அச்சமூகத்தை ஆளும் விதிகளாக இருக்கும். ஆனால் அவர்கள் எல்லோரும் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டை ஏற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜாஹிலியத் சமூகம் மனித சட்டத்தால் ஆளப்படும் சமூகமாகும். அதாவது இஸ்லாமிய கொள்கைகளோ கோட்பாடுகளோ நடைமுறைகளோ அதை ஆளமாட்டாது.(1)

முஸ்லிம் சிறுபான்மை

தாருல் இஸ்லாத்தில் வாழாமல் தாருல் குப்ரில் வாழும் முஸ்லிம்களையே “முஸ்லிம் சிறுபான்மை’ (அல் அகல்யதுல் முஸ்லிமா) என்ற சொல் குறிக்கின்றது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சிறுபான்மை, பெரும்பான்மை என்பது முக்கியமல்ல. எந்தச் சட்டங்களால் ஆளப்படுகின்றது என்பதே முக்கியமாகும்.

வரலாற்றுக் காரணங்களால் அல்லது தவிர்க்க முடியாததொரு சூழ்நிலையில் இஸ்லாத்தால் ஆளப்பட்ட ஒரு நாட்டை ஒருவர் தனது தாய்நாடாகக் கொண்டுவிடலாம். அல்லது தொழில் பார்க்கவோ உயர் படிப்புக்கோ சென்று தங்கிவாழ்வதாக அமையலாம். இன்று உலக முஸ்லிம்களின் எண்ணிக்கையில் முஸ்லிம் சிறுபான்மை நான்கில் ஒரு பங்கையும் விடவும் அதிகமாகும். ஐரோப்பிய நாடுகளில் மட்டும் முஸ்லிம் சிறுபான்மையின் சனத்தொகை அறுபது மில்லியனாக உயர்ந்துள்ளது. இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதனையே தெரிவிக்கின்றது.

சனத்தொகை அடிப்படையில், உலக முஸ்லிம்களில் அவர்களும் ஓர் அங்கம் என்று சொல்லலாம். இந்தியாவில் மட்டும் இருபது கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்தியத் துணைக் கண்டத்திலும் பொதுவாக இஸ்லாமிய வரலாற்றிலும் இந்திய முஸ்லிம்களுக்கென்று தனியான வரலாறும் நாகரிகப் பண்பாடும் இருந்துள்ளது.

கிழக்கு மேற்கு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் இலங்கை கேந்திர மையமாக அமைந்திருந்தது. மேலும் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்குமிடையிலான வர்த்தகத்தின் இடையீட்டாளர்களாக அரேபியர்கள் மாறியிருந்தனர். ஆறாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இஸ்லாம் தோன்றி முஸ்லிம்களின் ஆட்சிப் பரப்பு விரிவடைந்ததுடன் அரபு வர்த்தக நடவடிக்கைகள் புதியதோர் உந்துதலைப் பெற்றன. இந்து சமுத்திரப் பிரதேசங்களில் இடம்பெற்ற அதிகரித்த வர்த்தக நடவடிக்கைகளின் காரணமாக தென்மேற்கு இந்திய இலங்கைக் கரையோரங்களில் அரபு முஸ்லிம் வர்த்தகர்களின் குடியேற்றங்கள் தோன்றின. நீண்டகாலத் தங்கியிருப்பின் காரணமாக உள்ளுர்க் குடும்பங்களுடன் திருமண உறவுகளும் ஏற்பட்டன.(2)

ஆசியாவில் ஆரம்ப கால முஸ்லீம் சமூகங்களில் சில இலங்கையிலேயே தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. தீவுக் கடற்பிரதேசங்களில் இவர்களது வியாபார நடவடிக்கைகள் பெருமளவு இடம்பெற்றுள்ளன. அவ்வாறே தென்கிழக்காசியாவில் அவர்களின் நடவடிக்கையின் மையமாக இலங்கையே திகழ்ந்திருக்க வேண்டும். இந்தக் குடியிருப்புக்கள் முதன் முதலாக ஏழாம் நூற்றாண்டில் இலங்கையிலும் ஏழாம், எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் மேற்குப் பகுதியிலும் நிறுவப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.(3)

எனவே இலங்கை முஸ்லிம்கள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பாரம்பரியத்தை உடையவர்கள் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையை இந்நாட்டு அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் தொல்பொருளியலாளர்களும் அறிவார்ந்த ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தின் பண்புகளில் ஒன்று அது பிரசார சமூகமாக இயங்குவது. இறைத்தூதருக்குப் பின் அவரது தூதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் பொறுப்பும் முஸ்லிம் சமூகத்தையே சாரும். இது முஸ்லிம் சமூகத்தின் மீது விதிக்கப்பட்ட பர்ளு கிபாயாவாகும்.

அல்ஜீரிய இஸ்லாமிய இயக்கத் தலைவர் மஹ்பூல் நஹ்நாஹ் முஸ்லிம் சிறுபான்மை பற்றிக் கூறும் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

“முஸ்லிம்கள் கடந்தகால பூகோள வரலாற்று எல்லைகளுக்குள்ளே அடைபட்டு வாழ வேண்டுமென்று நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் முஸ்லிம்கள் ஒரு நிரந்தரத் தூதின் சொந்தக் காரர்கள். எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்லவும் ஏனைய மனிதர்களின் அறிவுக் கண்களை திறந்துவிடவும் அல்லாஹ் அத்தூதை அவர்களுக்கு வழங்கியுள்ளான்.’’(4)

அந்நியப் பெரும்பான்மையின் கீழ் வாழும்போது தனது தனித்துவ அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்வதே முஸ்லிம் சிறுபான்மை எதிர்நோக்கும் மிகப் பெரும் பிரச்சினையாகும். பெரும்பான்மை அந்நியருக்கு முன்னால் முஸ்லிம் சிறுபான்மை தனது தனித்துவ சிந்தனையில் நிலைத்தல் என்பது ஒரு ஜீவமரணப் போராட்டமாகும். அழிவு இரண்டுவகை. ஒன்று, வெறும் உடல் மாத்திரம் அழிவது. மற்றது, உடல் அப்படியே இருக்க அதன் கொள்கையும் ஆன்மாவும் அழிவது. இதை அல்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கின்றது.

“கொள்கையை விட்டுத் திருப்புவது கொலைசெய்வதை விட மிகவும் கடுமையானது.’’ உடல் அழிவதோடு அத்தனையும் அழிந்துவிடுகின்றது. ஆனால் கொள்கையால் அழிந்து போன மனிதன் ஒரு நடைப் பிணமாக மாறிவிடுகின்றான். பெரும்பான்மையின் சிந்தனைகளும் கலாசாரமும் முஸ்லிம் சிறுபான்மையை நோக்கிப் படையெடுக்கும் போது அதனுள்ளே கரைந்து போகாமல் அது தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் முஸ்லிம் சிறுபான்மை தனக்கென்று இஸ்லாமிய வாழ்வுக்கான சூழல் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏற்படுகின்றது.

“அந்நிய சமூகத்தின் மத்தியில் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. பெரும்பான்மையின் கலாசார சிந்தனைத் தாக்குதல்களின் செல்வாக்கு அதிகரிக்கும் போது பிரச்சினை இன்னும் பாரதூரமாகின்றது. அவ்வாறு சூழ்நிலையின் கைதிகளாக வாழ்வதற்கு இஸ்லாம் தெளிவாக அனுமதிக்கவில்லை. எனவே தாருல் குப்ரிலிருந்து தாருல் இஸ்லாத்தை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொள்வதே ஒரே வழி.’’ என்று சிலர் முடிவெடுக்கின்றனர்.

தற்போதைய நிலையில் இஸ்லாமியப் பூமியை நோக்கி ஹிஜ்ரத் செல்வது நடப்பியல்பானதாக இல்லை. அதே நேரம் இஸ்லாமியப் பூமி என்று எந்த நாட்டை அடையாளம் காண்பது என்பது மற்றொரு சிக்கலாகும். இந்நிலையில் எமது பகுதிகளிலேயே நாம் வாழ்வது யாதார்த்தமாகிவிட்டது. ஆகவே எம்மால் முடிந்தவரை இஸ்லாத்தைப் பின்பற்றுவதனைத் தவிர வேறு எந்த ஏற்கத்தக்க கருத்துக்கள் இல்லை.

இஸ்லாமியப் பூமியில் வாழும் முஸ்லிம் அல்லாதோருக்கு தனியான சட்டங்களும் விதிமுறைகளும் காணப்படுவது போல் முஸ்லிம் சிறுபான்மை குறித்து அல்குர்ஆனிலோ சுன்னாவிலோ நேரடியான சட்டங்கள் கூறப்படவில்லை. முன்னைய சமகால சட்ட அறிஞர்கள் யாரும் இப்பகுதியைத் தனியாக ஆய்வு செய்யவுமில்லை. இந்நிலையில் முஸ்லிம் பெரும்பான்மைக்கென்று தயாரிக்கப்பட்ட சட்ட சிந்தனை ஒழுங்குகளை முஸ்லிம் சிறுபான்மையும் அப்படியே பின்பற்றுவது சாத்தியமாகுமா? அதிலொன்றை மாத்திரம் பின்பற்றுவது எந்தளவு சாத்தியம்? அதில் மாற்றம் கொண்டு வருவதை இஸ்லாமிய ரீதியில் அனுமதிக்க முடியுமா? எனப் பல முக்கிய வினாக்கள் இயல்பாகவே தொடுக்கப்படுகின்றன. இது பற்றி ஆழ்ந்த ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மொத்தத்தில் இஸ்லாம் என்ற கொள்கையை முஸ்லிம் சிறுபான்மை நாட்டில் எப்படி நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்பதை ஆராய்வதே “பிக்ஹுல் அகல்லியா’ என்பதில் மையப்படுத்தப்படுகின்றது. (Idrees (Plus*)) (தொடரும்)


Plus*; The Holy Quran says; ....மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்.’’ (4:28)

Home                Sri Lanka Think Tank-UK(Main Link)

No comments:

Post a Comment