Pages

Monday 28 January 2013

இனவாதமும் இலங்கை முஸ்லிம்களும்

இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத சக்திகளின் கெடுபிடிகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றமை அவதானிக்க முடிகின்றது. மிகக் குறைந்தளவுள்ள இச்சக்தி நல்ல முறையில் திட்டமிட்டு செயற்படுவதனாலும் ஊடகங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதனாலும் இதற்கான ஆதரவுகள் குறுகிய எதிர்காலத்தில் பெருமளவு அதிகரித்தாலும் அதில் வியப்பேதுமில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரை செயற்படுவதை (action) விட எதிர் செயற்பாடுகள்தான் (reaction) அதிகம். ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் அதற்கான தீர்வுகள், நிகழ்ச்சிகள், ஆலோசனைகள் என்பதே எமது வழிமுறையாக காணப்படுகின்றது. ஆனால், அவ்வாறான ஓர் அசம்பாவிதம் இடம்பெறாமல் இருப்பதற்கான நீண்ட கால வழிமுறைகள் எம்மிடம் மிகவும் குறைவாகவே உள்ளது.
 
இன்று சந்தித்த அதே அந்நிய மத சகோதர் ஒருவரையல்ல நாம் நாளை சந்திக்கிறோம். நாளையாகும் போது அவரிலே பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதி வேக ஊடகங்கள் மூலமும் முஸ்லிம்களின் நடத்தைகள் வழியாகவும் முஸ்லிம்கள் பற்றிய பிழையான தகவல்கள், குற்றச்சாட்டுகள் அவரிலே உருவாகியிருக்கும். முஸ்லிம்களை பார்க்கும் அவரது கோணம் மாறுபட்டிருக்கும். எனவே, இலங்கையில் பல பகுதிகளிலும் பரந்து வாழ்கின்ற முஸ்லிம்கள், மோசமான ஓர் சூழ்நிலையை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடலாம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
இவ்வாறான ஓர் சூழ்நிலையிலிருந்து நம்மை காத்துக்கொள்வதற்கு என்ன வழிமுறைகளை முன்னெடுக்கலாம் என்பது பற்றி சில கருத்துக்களை முன்வைக்க  முனைகின்றோம்.
 
·         பிறமதத்தவர்களுடன் அதிகம் தொடர்புபடும் இடங்களான பஸ், புகையிர வண்டி, வைத்தியசாலை, மருத்துவ நிலையங்கள், வரிசையில் (queue) நிற்க வேண்டிய இடங்கள், சந்தை, வங்கி போன்ற இடங்களில் முண்டியடித்துக்கொண்டு செல்லாமல் விட்டுக்கொடுப்புடனும் பொறுமையாகவும் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக பிற மதகுருக்கள், கர்ப்பிணித்தாய், வயோதிபர், நோயாளி போன்றோருக்கு இடம்கொடுப்பது எமது கடமையாகும். நாம் அவ்வாறான இடங்களில் எமது முன்மாதிரிகளைக் காட்ட வேண்டும். பொது இடங்களில் எமக்கு அருகில் இருக்கும் அந்த அந்நிய மத சகோதரர் பற்றி எமக்குத் தெரியாது. அவர் ஒரு வைத்தியராக, ஆசிரியராக, ஊடகவியலாளராக, உயர் அந்தஸ்துள்ள அரச ஊழியராக, ஆட்டோ ஓட்டுனராக, முஸ்லிம்கள் பற்றிய காழ்ப்புணர்வு கொண்ட எவராகவும் இருக்கலாம். நாம் விடும் சிறிய தவறுகள் கூட சில நேரங்களில் எமது சமூகத்துக்கே இழிவை ஏற்படுத்துவதோடு கலவரங்களுக்கும் காரணமாக அமையலாம்.
 
·         அதிகமான முஸ்லிம் வியாபாரிகள் இன்று தமது நம்பிக்கை நாணயத்தை இழந்துள்ளனர். ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்தல், அதிக இலாபமீட்டுதல், வாடிக்கையாளர்களுடன் அதிருப்தியுடன் நடந்துகொள்ளல் போன்ற முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக சொல்லப்படும் விமர்சனங்கள் பற்றி ஒவ்வொரு வியாபாரியும் கவனமெடுக்க வேண்டும். தமது வியாபாரம் மூலம் அந்நியர்களிடம் எவ்வாறு முஸ்லிம்கள் பற்றிய நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்த முடியுமோ அதற்காக அனைத்து வழிமுறைகளையும் வியாபாரிகள் சிந்திக்கலாம்.
 
·         தம்முடன் படிக்கின்ற, தொழில் செய்கின்ற, அடிக்கடி சந்திக்கின்ற அந்நிய மத நண்பர்கள், முஸ்லிம்கள் பற்றிய அவர்களிடம் இருக்கின்ற சந்தேகங்களுக்கும் வினாக்களுக்கும் தெளிவான, சரியான பதில்கள் வழங்கப்பட வேண்டும். தமக்குத் தெரிந்த பதில்களைக் கூறி ஒருமாதிரி சமாளித்துவிட்டேன் என்று திருப்திப்படாமல் அதற்கான விளக்கங்களை உரிய முறையில் வழங்க வேண்டும். முடியுமானால் இருவட்டுக்கள் (CDs), வீடியோக்கள், கட்டுரைகள் போன்றவற்றை வழங்குவதும் சிறந்தது. அவர்கள் கேள்விகள் கேட்காத சந்தர்ப்பங்களின் போது அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியும் பதில்களை வழங்க முயற்சிக்க முடியும்.
 
·         இஸ்லாமிய நிறுவனங்கள், அமைப்புகள், வியாபார நிலையங்கள், வெளிநாட்டு முகவர் நிலையங்கள், செல்வந்தர்கள் மாத்திரமின்றி தனிநபர்களும் சிங்கள, ஆங்கில மொழிகளில் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடாத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். சமூக நல்லினக்கம் பற்றிய கட்டுரைகள், கையேடுகள், ஸ்டிக்கர், குறுந் திரைப்படங்கள், கலந்துரையாடல்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முடியும். தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தமக்குள்ளால் சமூக ஊடகங்களில் share பன்னிவிட்டு திருப்திப்படுவதை விட அந்நியவர்கள் எத்தனை பேருக்கு இது சென்றடைந்துள்ளது என்பது பற்றி கவனமெடுப்பது நல்லது. அத்துடன் சிங்கள, ஆங்கில மொழிகளில் இடம்பெறுகின்ற முக்கிய நிகழ்ச்சிகளில் முஸ்லிம் பெயரில் சிறந்த கருத்துக்களை தொலைபேசியினூடாக தெரிவிப்பதும் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவதும் ஒரு நல்ல வழிமுறையாகும். மேலும் கிணறுகள் கட்டுதல், அநாதை பிள்ளைகளைப் பராமரித்தல், வீட்டு கைத்தொழில் வசதிகளை வழங்குதல், சமூக சேவைகள், அனர்த்த உதவிகள், உயர் கல்வி புலமைப் பரிசில்கள் போன்ற தமது சேவைகளை முஸ்லிம்களுடன் மாத்திரம் சுருக்கிக்கொள்ளாமல் பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு பகுதி வழங்க வேண்டும்.
 
·         சொந்த வாகனங்களில் செல்லும் போது சந்தர்ப்பம் கிடைத்தால் பஸ்ஸுக்கு காத்துக்கொண்டிருக்கும் பயணிகள் ஒருவரையேனும் தம்முடன் அழைத்துச் செல்ல முடியும். குறிப்பாக பௌத்த மதகுருக்களைக் கண்டால் தவற விடக்கூடாது. அத்துடன் நாம் முஸ்லிம்கள் என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
 
மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு பகுதியும் விரிவாகப் பேசப்பட வேண்டியவை. வெள்ளிக்கிழமை குத்பாக்கள், வானொலி நிகழ்ச்சிகள், பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் போன்றவற்றினூடாக இது தொடர்பாக சிறுவர்கள், இளைஞர்கள், ஆட்டோ சாரதிகள், ஆண்கள், பெண்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என சமூகத்தின் எல்லா மட்டங்களிலுமுள்ள முஸ்லிம்களுக்கு விழிப்பூட்டல் வழங்கப்பட வேண்டும்.
 
நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்” என நபியவர்களைப் பார்த்து அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே குறிப்பிடுகிறான். இது நபிக்கு மட்டுமல்ல எமக்கும்தான்.
 
தனது நடத்தையின் மூலம் ஓர் அந்நிய சகோதரனிலே முஸ்லிம்கள் பற்றி நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்துவதை விட தன்னால் முஸ்லிம் சமூகத்துக்கு ஓர் ஆபத்து வந்து விடாமல் நடந்துகொள்வது அதை விட சிறந்தாகும். எமது நன்நடத்தை நவீன ஊடகங்களையும் வெல்லும் ஆற்றல் மிக்கது. இது குறித்து இலங்கை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து நடந்துகொள்வது அவர்களது கடமையாகும். (அபூ ஹுனைப், via Muslim Watch)

No comments:

Post a Comment