Pages

Thursday, 11 February 2010

2010 Sri Lanka ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றது சிறுபான்மையினரே ....!

நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கான பல காரணங்களை கூறலாம்.


முதலாவது மூன்று தசாப்த தொடர்நிலை போர் முடிவுக்குக் கொண்டு வந்ததனை அடுத்து நடைபெறுகின்ற தேர்தல். அத்துடன் இதில் போட்டியிடுகின்ற இரண்டு வேட்பாளர்களும் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதில் சம பங்காற்றிய வர்கள். அடுத்து நீட்சி பெற்றிருந்த இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வினை சிறு பான்மையின மக்கள் எதிர்பார்த்த ஒரு தேர்தலாகவும் இதனை குறிப்பிடலாம்.

இந்தத் தேர்தல் களத்தில் நின்ற மஹிந்த, பொன்சேகா ஆகிய இருவரும் ஒரு புள்ளியினைக் கொண்டுதான் தமது தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்தனர். அதுதான் யுத்த வெற்றி. இருவரும் இதனை முன்வைத்ததினால் அதிக குழப்பம டைந்தோர் சிங்களவர்கள்தான். இது சிங்கள வாக்கினை பிளவுபடுத்தியுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. ஏனெனில் பிரச்சாரத்திற்கு எடுத்துக் கொண்ட கருவில் வலு சமநிலை பெற்றவர்களாக இருக்கின்றனர். மற்றொரு வகையில் தமிழர்களிடையும் ஒரு சமநிலைப்பாடு இருப்பது மறுப்பதற்கில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வாறான முடிவினை எடுத்திருக்க வேண்டும், எவ்வாறு இந்தத் தேர்தலை எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்பதனை இக்கட்டுரை தெரியப்படுத்துகின்றது.

நான் மேற்குறிப்பிட்ட காரணிகளுடன் இரு வேட்பாளர்களும் தங்களது வெற் றிக்கு சிறுபான்மையினரின் வாக்குகளில் தங்கி நின்றமை பொதுப் பண்பாகக் காணப்பட்டது. இதனை முழுமையாக வினைத்திறன் மிக்கதாக பயன்படுத்துவ தில் சிறுபான்மையினர் வெற்றி கண்டனரா?

முதலில் சிறுபான்மையினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஒரு கூட்டணி ஒன்றினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். போருக்குப் பிந்தியதான முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு... என உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றுகூடியமை, சூரிச்சில் நடந்த சிறுபான்மையின கட்சிகளின் ஒன்றுகூடல் என்பன இதற்கான சாதகமான சமிக்ஞைகளைக் காட்டியபோதும் அனைத்தும் வெறும் புஸ்வாணமாகிவிட்டது.

இவர்கள் ஒற்றுமைப்படாமைக்கான காரணம் என்ன? மொழியில் சிக்கலா? அல்லது எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறுபட்டனவா? உண்மையில் இவர்கள் வேற்றுமை படுகின்ற விடயங்கள் ஒரு சில புள்ளிகள்தான். அவற்றினை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனாலும் ஒற்றுமைப்பட்ட ஒன்றுபட வேண்டிய எத்த னையோ புள்ளிகள் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் ஏன் புறமொதுக் கினார்கள். சுய இலாபங்களுக்காகவா அல்லது ஒவ்வொருவரும் பெரிதாகப் பீத்து கின்ற சமூகத்தின் அரசியல் இலாபங்களுக்காகவா? விடைகளாய் கேள்விக் குறிகளே எஞ்சுகின்றன.

முதலாளித்துவ சிந்தனையைக் கொண்ட ஐ.தே.க. வும் சோசலிச சிந்தனை கொண்ட ஜே.வி.பி.யும் இணையும் என்றிருந்தால், ஏன் தமிழ் முஸ்லிம் கட்சிக ளால் இணைய முடியாமல் போனது. ஐ.தே.க., ஜே.வி.பி. இற்கிடையிலான உறவு எப்படிப்பட்டது? என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டவேண்டிய அவசியமில்லை.

அவை தங்களது பொதுக் குறிக்கோளினை அடைவதற்காக தங்களது முழு வேற்றுமையினையும் மறந்து ஒன்றிணைந்துள்ளது. இந்த புத்தி உங்களிடமி ருந்து எங்கே போனது. உங்களது சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நீங்கள் காட்டும் அக்கறை இதுதானா? இந்தத் தேர்தலில் உங்களது தனித்தனி பெயர் களை ஒருபக்கம் வைத்துவிட்டு சிறுபான்மையினரின் கூட்டணி என்ற அமைப் பில் உங்களை அறிமுகப்படுத்தியிருக்க முடியும்.

சகோதரர் சிறாஜ் தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டதுபோன்று இது பகை மறப்புக்கான காலம். இங்கு இதனையே நாம் முற்படுத்தி ஒற்றுமைப்பட்டு எமது பிரச்சினையைப் பேசியிருக்க வேண்டும். இதுதான் கனதி மிக்கதாக இருக்கும். எமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருவதாக அமையும். இது எமது ஒவ்வொரு மக்களினதும் வாக்குகளுக்கு பெறுமதியினைப் பெற்றுத் தரும். இன்று வாக்குகள் செல்லாக்காசாகிவிட்டன.

எமது உரிமைகளை உரத்துப் பேசும் களம்தான் இந்த ஜனாதிபதித் தேர்தல் களம். 30 வருடங்கள் ஆயுதங்களினால் உரிமை வேண்டி உரத்த கூக்குரலிட்டோம். இறுதியாக என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அரசியலின் மூலம்தான் உரிமைகளைப் பெறலாம் என்பதனை மர்ஹூம் அஷ்ரப், அமரர் தொன்டமான் போன்றோர் எடுத்துக் காட்டினர். உண்மையில் ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழ்கின்ற மக்கள் தங்களது உரிமைகளை வென்றெடுக்க சாத்தியமான வழி இதுதான். இதனை உணர்ந்த பின்னும் இதற்கான முன்னு தாரணங்களிலிருந்தும் இந்தத் தேர்தலில் நமது அரசியல்வாதிகள் கோட்டை விட்டுள்ளனர்.

அடுத்து நாம் செய்திருக்க வேண்டியது எமது உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பு பட்ட விடயங்களில் தமிழ், முஸ்லிம், மலையக... மக்கள் மூவரும் எதிர்கொள் கின்ற பொதுப்படையானவற்றினை அடையாளம் கண்டு, அடையாளப்படுத்தி யிருக்க வேண்டும். உண்மையில் இதில் நிறைய விடயங்கள் அடங்கும். உதாரண மாக கல்விப் பிரச்சினை இன்று சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பொதுவான முக்கிய பிரச்சினை. (பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி, தரப்படுத்தல் முறை, பாடசாலை வளப் பிரச்சினை, ஏனைய பரீட்சைகள்) என்பவற்றில் உடன்பாடு கண்டிருக்க முடியும். இதேபோன்று காணிப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை போன்ற பல காணப்படுகின்றன. இவ்வாறானவற்றில் நாம் ஒன்று சேர்ந்திருக்க வேண்டாமா?

நாம் எவ்வாறு எமது உரிமைகளினை வேண்டுகின் றோமோ அதேபோன்று நாட்டின் நலனிலும் நாம் எமது அக்கறையினை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் இதனூடாக இயல்பாகவே எமது மக்கள் நன்மை அடைவதுடன் பெரும்பான்மை மக்களிடையே எம் பற்றியதான நல்ல மனப்பதிவினை ஏற்படுத்துவதுடன் சிலரது குரோத வேட்கை மற்றும் தப்பபிப்பிராய மனோநிலை போன்றவற்றினை தணிக்கின்றது.

அத்துடன் நாம் நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார, சமூக வளர்ச்சி என்பவற்றில் விருப்பு கொண்டோர் என்பதற்கான பறைசாற்றுதலா கவும் இது அமையும். இதனை எப்போதும் முற்படுத்துவது சிறந்தது என்பதுடன் எமது உரிமைக்கு பெரும்பான்மை யினர் பச்சை கொடி காட்டவும் வழிகோலும். உதாரணமாக ஊழல், போதை பொருள் பாவனை போன்ற பல அம்சங்கள் காணப்படுகின்றன.

பெரும்பான்மையினருடன் சில விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு எமது உரிமைகளினை அடைய முயற்சிக்க வேண்டும். இவ்வாறான நெகிழ்வுப் போக்கு பெரும்பான்மையினருடன் மட்டுமன்றி தான் இணைந்து காணப்படுகின்ற ஏனைய சிறுபான்மையினருடனும் காணப்பட வேண்டும். ஏனெனில் இறுக்கமாக இருப்பது எவ்விதமான நகர்வுக்கும் இடமளிக்காது. சில கட்ட நகர்வுகளுக்கு இது முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது.

அதிகாரப் பகிர்விற்கான அடியெடுப்பு, உண்மையில் அதிகாரப் பகிர்விற்கு எடுத்த எடுப்பில் வருவது சிங்கள மக்களிடையே ஒருவகையான மனோபாவத்தினை யும் பல தடைகளினையும் கொண்டு வரலாம். எனவே, நாம் இதனை விட முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயங்களினை அடையாளங் கண்டு அவற் றினை அடைய முயற்சிக்க வேண்டும். இவற்றுடன் சாத்தியமான விடயங்க ளிலே அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிகாரப் பகிர்வு எனும்போது அது விரிந்ததாக அமைய வேண்டும். ஒவ்வொரு சமூக கூறும் தங்களை தாமே ஆளுகின்ற அதிகாரம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு இனக் குழுமத்திற்கும் தனியான பண்பாடுகளும் கலாசார மும் காணப்படுகின்றது.

உண்மையில் தேர்தல்கள் என்பது சிறுபான்மையிரைப் பொருத்தவரை முக்கியத் துவம் வாய்ந்ததொன்று. இதனைப் பயன்படுத்தி பேரம்பேசுதல் என்பதனூடாக ஏற்படுத்திக் கொள்ளும் பெரும்பான்மை அரசுடனான உறவினை நாங்கள் கைகொள்கின்றபோது பல சாத்தியப்பாடுகளினை அடைய முடியும் என்பதனை மறுக்க முடியாது.

இந்தத் தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் இரண்டு முன்னணிகளிலும் சேர்ந்து கொண்டதாலும் எமது உரிமைகளினை வென்றெடுப்பதற்கு இந்தத் தேர்தல்க ளினை பயன்படுத்தலாம் என்பதுபற்றி ஒரு கலந்துரையாடல்கூட மேற்கொள் ளாததினாலும் சிறுபான்மை சமூகத்தினை அதன் தலைவர்களே ஏமாற்றியுள்ள னர். அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதில் மீண்டும் 6 வருடங்களினை பின்தள்ளியுள்ளார்கள். அடுத்த தேர்தல் வரைக்கும் ஒரு தீர்வினை எட்டுவதற்கான சிறு அடியெடுப்பினைக் கூட கடந்த தேர்தலில் நாம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அடுத்த பொதுத் தேர்தலிலும்கூட உணர்ந்து செயற்படுவார்களா என்பது கேள்விக்குறியே.

இந்தத் தேர்தலில் யார் வெற்றிபெற்றபோதும் சிறுபான்மையினர் தோல்வியடைந்துள்ளனர் என்பது தெளிவானது. நாம் பல வருடங்கள் அரசியல் ரீதியாக பின்தள்ளப்பட்டிருக்கிறோம்.

முன்தஸர் அஸ்ஸஅதி


Source: http://www.meelparvai.net/index.php?option=com_content&view=article&id=1688:2010-02-04-10-43-46&catid=91:2009-02-12-05-18-43&Itemid=285

No comments:

Post a Comment